Kurinji : 12 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த இயற்கையின் அற்புதம்; `நீல மலையாக' மாறிய ஊட்டி!

குறிஞ்சி நிலமான நீலகிரி மலையில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் `மினியேச்சர் குறிஞ்சி’ முதல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் `நீலக் குறிஞ்சி’ வரை பல்வேறு வகையான குறிஞ்சிகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக ஒரே சமயத்தில் பூக்கும் தன்மை கொண்ட புதர் வகைத் தாவரமான குறிஞ்சி பூக்கும் சமயங்களில் ஒட்டுமொத்த மலையும் நீல நிறமாக காட்சியளிப்பது வழக்கம். இதன் காரணமாகவே `நீல மலை’ என்ற பெயரில் நீலகிரி மலை அழைக்கப்படுகிறது.

குறிஞ்சி

இதனை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது ஊட்டி மற்றும் கோத்தகிரி பகுதிகளில் குறிஞ்சி மலர்கள் ஒட்டுமொத்தமாக பூத்துள்ளன. இதனால் அந்த மலைப்பகுதிகள் நீலக் காடாக மாறி காட்சியளிக்கின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் ‘ஸ்டபிலான்தஸ் குந்தியானஸ்’ வகை குறிஞ்சியை உள்ளூர் மக்களே ஆச்சர்யத்துடன் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

கடல் மட்டத்திலிருந்து குறிப்பிட்ட உயரம், குறிப்பிட்ட காலநிலை மற்றும் குறிப்பிட்ட நில அமைப்பில் மட்டுமே வளரும் தன்மை கொண்ட அரிய வகை மலரான குறிஞ்சி பூப்பது மகிழ்ச்சி என்றாலும், அதிகரிக்கும் அந்நிய களை தாவரங்களின் ஆக்கிரமிப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் குறிஞ்சி புதர்களின் பரப்பளவு வெகுவாக குறைந்து வருவதாக சூழலியல் ஆய்வாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குறிஞ்சி

இது குறித்து தெரிவித்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள், “ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் சிறு குறிஞ்சி முதல் 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பெருங்குறிஞ்சி வரை 200- க்கும் அதிகாமன குறிஞ்சி இனங்கள் ஆசியாவில் காணப்படுகின்றன.

நீலகிரியைப் பொறுத்தவரை கோடநாடு முதல் மேல் பவானி வரை குறிஞ்சிப் புதர்கள் செழிக்கும் பல பகுதிகள் உள்ளன. காடழிப்பு, அந்நிய களைத் தாவரங்களின் ஆக்கிரமிப்பு, அதிக வீரியம் கொண்ட களைக்கொல்லி மருந்து பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறிஞ்சிப் புதர்களின் பரப்பளவு படுவேகமாக குறைந்து வருகின்றன.

நீலகிரியின் அடையாளமாக விளங்கும் குறிஞ்சி மலர்களைப் பாதுகாக்க வனத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குறிஞ்சி பூக்கும் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகவும் நிரந்தரமாக அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தி வருகின்றனர்.

குறிஞ்சி

குறிஞ்சி பாதுகாப்பு குறித்து தெரிவித்த நீலகிரி வனக்கோட்ட அதிகாரிகள், “ஊட்டி மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சில இடங்களில் தற்போது அதிக அளவில் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.‌ அவற்றை பாதுகாக்கும் விதமாக வனத்துறை பணியாளர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தி வருகிறோம். குறிஞ்சியின் வகை, அதன் பரப்பளவு மற்றும் கடைசியாக இந்த பகுதியில் எந்த வருடம் பூத்தது போன்ற தகவல்களை ஆய்வு செய்து சேகரித்து வருகிறோம் ” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.