இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச தொடர் முடிவடைந்ததும் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்து பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இப்போட்டி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக நடைபெற இருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் அந்த அணிக்கு பல டிப்ஸ்களை வாரி வழங்கி வருகின்றனர். ரிக்கி பாண்டிங் அண்மையில் பேட்டியில் பேசும்போது, இம்முறை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்திய அணியை தோற்கடிக்க அனைத்து ஆலோசனைகளையும் வழங்குவேன் என தெரிவித்துள்ளார். அவருடைய வரிசையில் அந்த அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பியும் இணைந்துள்ளார்.
அவர் பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை பற்றி பேசும்போது, இந்திய அணி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை இம்முறை வெல்லாது என தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அவர், பார்டர் கவாஸ்கர் கோப்பை போட்டியை ஆஸ்திரேலியா கைப்பற்றும் என்றும் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். இப்போது இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியை எளிதில் தோற்கடிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் இந்தியாவை ஆஸ்திரேலியா தோற்கடிக்க வேண்டும் என்றால் ஆஸி அணியின் பந்துவீச்சாளர்களான பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் நாதன் லியான் ஆகியோர் சிறப்பாக செயல்படுவது மிக மிக முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி குறித்து கில்லெஸ்பி கூறுகையில், “இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் சிறப்பாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகிறார். சமீப காலமாக ஆஸ்திரேலியாவை தோற்கடித்துள்ளனர். ஆனால் இம்முறை இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்மித் அணிக்காக 4வது இடத்தில் பேட் செய்ய வேண்டும். ஏனெனில் அவர் இந்த இடத்தில் தான் தனது சிறந்த ஃபார்மை வெளிப்படுத்துகிறார்” என தெரிவித்துள்ளார்
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் போட்டிகள் ஐந்து போட்டிகள் கொண்ட தொடராக நடக்கிறது. பெர்த், அடிலெய்டு (பிங்க் பால் மேட்ச்), பிரிஸ்பேன், மெல்போர்ன் மற்றும் சிட்னியில் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நவம்பர் 22ஆம் தேதி தொடங்குகிறது.