கரூர்: கரூரில் 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை வாங்கல் போலீஸார் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கரூர் மாவட்டம் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை சிபிசிஐடி போலீஸார் செப். 2 கரூரில் கைது செய்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
சிபிசிஐடி காவலில் விசாரிக்க செப். 5 கரூர் நீதிமன்றத்தில் சேகர் ஆஜர்படுத்தப்பட்டார். 2 நாள் நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து அவரை விசாரித்து செப். 7 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சேகரை கரூர் குற்றவியல் நடுநர் நீதிமன்றம் 1-ல் செப். 11 அன்று போலீஸார் ஆஜர்படுத்தினர். செப். 25 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து திருச்சி மத்திய சிறையில் சேகர் அடைக்கப்பட்டார்.
வாங்கல் போலீஸார் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக இன்று (செப். 18) திருச்சி மத்திய சிறையில் இருந்து சேகரை அழைத்து வந்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் ஆஜர்படுத்தினர். வாங்கல் போலீஸார் விசாரணைக்கு 10 நாள் அனுமதி கேட்ட நிலையில் நீதிமன்றம் 2 நாள் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.