“கூட்டணி பிளவுபடாததால் விரக்தி” – தமிழிசை விமர்சனத்துக்கு திருமாவளவன் பதிலடி

சென்னை: கூட்டணி பிளவுபடும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாததால் விரக்தியில் பேசுவதாக முன்னாள் ஆளுநர் தமிழிசைக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

“மது ஒழிப்பு மாநாடு விவகாரத்தில் சிறுத்தையாக தொடங்கிய திருமாவளவன்; முதல்வரை சந்தித்ததும் சிறுத்துப் போய்விட்டார்” என்பன உள்ளிட்ட விமர்சனங்களை முன்னாள் ஆளுநர் தமிழிசை முன்வைத்திருந்தார். இந்நிலையில், ரெட்டமலை சீனிவாசன் நினைவுநாளை ஒட்டி, அவரது நினைவிடத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று (புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பெரியார் திடலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியுற்றேன். அதை வரவேற்றுப் பாராட்டி, சமூக வலைதள பக்கங்களிலும் பதிவு செய்தேன். சமூக நீதி பார்வையோடு அவர் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறார் என்பது மகிழ்ச்சியளிப்பதுடன் மிகுந்த நம்பிக்கையும் அளிக்கிறது. பெரியார் அரசியல் என்பது திமுக, அதிமுக அரசியல் கட்சிகளுக்கானது மட்டுமல்ல, சமூக நீதி மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்குமானது. சமத்துவத்தை நாடும் அனைவருக்குமானது. அந்த புரிதல் விஜய்க்கு இருப்பதை அறிந்து பெருமைப்படுகிறேன்.

திராவிட பாதையில் வந்தால் திராவிட கட்சிகள் வளரவிடாது என பாஜகவினர் விமர்சிப்பார்கள். அது அவர்களுக்கு வயிற்றெரிச்சலை தரக் கூடிய அரசியல் தான். பெரியார் என்றாலே அவர்களுக்குப் பிடிக்காது. சட்டப்பேரவையில் பெரியார் என்ற வார்த்தையை உச்சரிக்க மாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். அந்தளவுக்கு பெரியார் மீது வெறுப்பு இருக்கிறது. எனவே, அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்.

விசிக மாநாட்டை விமர்சிப்பவர்கள் மூக்கறுபட்டு கூக்குரலிடுகின்றனர். அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. தேர்தலுக்கு 18 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே தேர்தல் கணக்கு என்றெல்லாம் கூப்பாடு போட்டார்கள். எப்படியாவது கூட்டணி மேலும் விரிசல் அடையாதா, பிளவுபடாதா என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்ததன் விரக்தி வெளிப்படுகிறது.

தங்களுக்கு எதிரான அரசியலை பேசுவது புரிந்தும் விசிக மாநாட்டுக்கு திமுக வருகிறது என்றால் இரு கட்சிகளும் கொள்கை அளவில் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறது என்பதே பொருள். தேசிய கல்விக் கொள்கையை ஏன் ஏற்க வேண்டும். தேசிய அளவிலான பார்வையோடு மனிதவளத்தை பாதுகாக்க கோரிக்கை விடுக்கிறோம். இது ஏற்கெனவே முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் சொன்னது தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.