ஜம்மு: பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் முதல்கட்ட வாக்குப்பதிவு 24 தொகுதிகளில் இன்று (செப்.18) காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பகல் 1 மணி நிலவரப்படி 41.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. முன்னதாக முற்பகல் 11 மணி நிலவரப்படி 26.72 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
முதல்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 23.27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். கடுமையான குளிர் நிலவி வரும் சூழலிலும் எவ்வித சர்ச்சையும், பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, கிஷ்த்வாரில் 56.86%, தோடாவில் 50.81%, ராம்பனில் 49.68%, சோபியானில் 38.72%, குல்ஹாமில் 39.91%, ஆனந்த்நாக்கில் 37.90% மற்றும் புல்வாமாவில் 29.84% வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைய இருக்கிறது.
60% வாக்குப்பதிவு எதிர்ப்பார்ப்பு: இதனிடையே ஜம்மு காஷ்மீரில் அமைதியான முறையில் வாக்குப்பதிவுகள் நடைபெறுவதாக மாநில தேர்தல் தலைமை தேர்தல் அதிகாரி பி.கே.போல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் வாக்களிக்க வரும் ஆர்வத்தைப் பார்க்கும் போது அதிக அளவில் வாக்குப்பதிவாகும் என்று தோன்றுகிறது. 60 சதவீதம் வாக்குகள் பதிவாகலாம் என எதிர்பார்க்கிறோம். வாக்குப்பதிவு சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் அழைப்பு: முன்னதாக, தேர்தலில் வாக்களிக்கும்படி காஷ்மீர் மக்களுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அழைப்பு விடுத்தனர்.
மக்களை வாக்களிக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜம்மு காஷ்மீரில் உள்ள எனது சகோதர, சகோதரிகளே. இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாநிலத்தின் மாநில அந்தஸ்த்து பறிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. இது உங்களின் அனைத்து அரசியலமைப்பு உரிமைகளை மீறும் செயலாகும், ஜம்மு காஷ்மீருக்கான அவமானம் ஆகும். இண்டியா கூட்டணிக்காக நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும், உங்கள் உரிமைகளைத் திரும்பக் கொண்டு வரும், வேலைவாய்ப்பை வழங்கும், பெண்களை வலிமையாக்கும், அநீதியின் சகாப்தத்தில் இருந்து உங்களை வெளியே கொண்டுவரும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் செழிப்பாக்கும்” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு வாக்குச்சாவடி: முதல்கட்ட தேர்தலில், புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் 35,500 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் 16 தொகுதிகளில் வாக்களிக்கின்றனர். இவர்களுக்காக ஜம்முவில் 19, உதம்பூரில் 1, டெல்லியில் 4 என மொத்தம் 24 சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.