ஜம்மு காஷ்மீர் தேர்தல் | முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது: அமித் ஷா, கார்கே அழைப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு 24 தொகுதிகளில் இன்று (செப்.18) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடும் குளிர் காரணத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகியும்கூட வாக்குப்பதிவு சற்று மந்தமாகவே இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரை எவ்வித சர்ச்சையும், பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்ற தகவலும் வந்துள்ளது.

தேர்தலில் வாக்களிக்கும்படி காஷ்மீர் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

காலை உணவுக்கு முன்னரே.. இன்று காலை தனது எக்ஸ் பக்கத்தில் இந்தியில் பகிர்ந்த பதிவொன்றில், “ஜம்மு காஷ்மீர் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பெருமளவில் திரண்டு வாக்களிக்க வேண்டும். காஷ்மீரில் இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் தரும், மகளிர்க்கு அதிகாரம் அளிக்கும், பிரிவினைவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசு அமைய வாக்களியுங்கள்.

உறுதியான அரசாங்கம் அமைந்தால் மட்டுமே ஜம்மு காஷ்மீரை தீவிரவாதம் அற்ற பகுதியாக மாற்ற முடியும். அத்தகைய அரசாலேயே மாநிலத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியும், எனவே காலை உணவுக்கு முன்னரே வாக்காளர்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்” என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வாக்களிக்கும்போது அதை நினைவில் கொள்ளுங்கள்.. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் பக்கப் பதிவில், “ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஆர்வத்துடன் இருக்கின்றனர். காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து பெற வேண்டும், உண்மையான வளர்ச்சிக்கான புதிய அத்தியாயம் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். அதனால் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே மக்கள் பெருமளவில் வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை செலுத்த வேண்டுகிறோம்.

ஒவ்வொரு வாக்கும் ஜம்மு காஷ்மீரின் எதிர்காலத்தை செதுக்கும் சக்தி கொண்டது. ஜம்மு காஷ்மீரில் அமைதி, ஸ்திரத்தன்மை, நீதி, வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதிப்படுத்தக் கூடிய ஆட்சி அமைய வேண்டும். அதற்காக, அனைத்து வாக்காளர்களுக்கும் குறிப்பாக முதன்முறை வாக்காளர்களுக்கு ஜனநாயகக் கடமையாற்ற வேண்டுகோள் விடுக்கிறோம்.

மாற்றத்துக்கான சக்தியாக இருக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். முதன்முறையாக ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக தகுதி இறக்கம் செய்யப்பட்டுள்ளது. வாக்களிக்கும் போது இதற்கு யார் காரணம் என்பதை நினைவில் நிறுத்தி வாக்களியுங்கள். நாம் ஒன்றிணைந்து ஜம்மு காஷ்மீருக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

களத்தில் 219 வேட்பாளர்கள்: அனந்த்நாக், சோபியான், தோடா, ராம்பன் உட்பட 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இத்தொகுதிகளில் 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.66 லட்சம் இளைஞர்கள் உட்பட சுமார் 23.27 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

முதல்கட்ட தேர்தலில், புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் 35,500 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் 16 தொகுதிகளில் வாக்களிக்கின்றனர். இவர்களுக்காக ஜம்முவில் 19, உதம்பூரில் 1, டெல்லியில் 4 என மொத்தம் 24 சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 8-ல் வாக்கு எண்ணிக்கை: ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஒன்றுபட்ட மாநிலமாக இருந்த ஜம்முகாஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.