புதுடெல்லி,
டெல்லியில் தொலைபேசி அழைப்பு விவர பதிவுகள் மற்றும் மொபைல் போன் பயன்படுத்துவோரின் இருப்பிடங்கள் ஆகிய விவரங்கள் அடங்கிய பதிவுகளை கும்பல் ஒன்று திரட்டி, விற்று வருகிறது என டெல்லி காவல் துறைக்கு ரகசிய தகவல் சென்றது. இதனை தொடர்ந்து, அந்த கும்பலை பிடிக்கும் முயற்சியை போலீசார் தொடங்கினர்.
இதன்படி, போலீசாரில் ஒருவர் வாடிக்கையாளர் போன்று சென்று சந்தேகத்திற்குரிய கும்பலை அணுகி, ஒரு குறிப்பிட்ட மொபைல் போன் எண்ணை பற்றிய தொலைபேசி அழைப்பு பதிவுகள் வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு அந்த கும்பலை சேர்ந்த நபர் ரூ.60 ஆயிரம் பணம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து ஆன்லைன் வழியே ரூ.29 ஆயிரம் முன்பணம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள ரூ.31 ஆயிரம் தொகையை தொலைபேசி அழைப்பு பதிவுகளை பெற்று கொண்ட பின்னர் தரப்படும் என அந்நபரிடம் கூறப்பட்டு உள்து.
இதன்பின்பு, வாட்ஸ்அப் வழியே வாடிக்கையாளருக்கு தொலைபேசி அழைப்பு பதிவுகள் வழங்கப்பட்டன. மீத தொகையை பெறுவதற்கு டெல்லியிலுள்ள மெட்ரோ ரெயில் நிலையம் ஒன்றிற்கு வரும்படி அந்நபர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து டெல்லி போலீசார், துவாரகா மோர் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தி, சந்தேக நபரை கைது செய்து அழைத்து சென்றனர். அவர் தருண் வின்சென்ட் டேனியல் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவர் கூறிய தகவலின் அடிப்படையில் ஹர்ஷ் குமார் என்ற மற்றொரு கூட்டாளியை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரிடம் நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
இதுவரை 100-க்கும் மேற்பட்ட மொபைல் போன் வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்பு பதிவுகளை பெற்று, விற்றுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்கள் அளித்த தகவலின்படி, சஞ்சய் குமார் என்ற மற்றொரு நபரும் இந்த செயலில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.