தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி தேர்வு: தமிழக அரசு

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரியத்தின் நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது.

தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் இன்று (செப்.18) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில், நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவில் ஒரு காலியிடத்துக்கான தேர்தல் கால அட்டவணை செப்.6-ம் தேதியன்று அறிவிக்கையாக வெளியிடப்பட்டது. நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு எம்.பி நவாஸ்கனி, வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தலில் மேற்கண்ட பிரிவில் ஒரு காலியிடத்துக்கு ஒருவர் மட்டுமே போட்டியிடுவதால், தமிழ்நாடு வக்பு வாரிய விதிகளின்படி, நவாஸ்கனி தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழக வக்பு வாரியத்தின் தலைவராக இருந்தவர் எம்.அப்துல் ரகுமான். திமுக கூட்டணி கட்சிகளில் ஒன்றான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த இவர், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வக்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2021-ம் ஆண்டு திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த ஐயுஎம்எல் கட்சிக்கு வக்பு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அரசின், வக்பு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பான விவகாரம், வக்பு சொத்துகள் தொடர்பான விவகாரம் ஆகியவை சிக்கலை ஏற்படுத்தியது. இதையடுத்து, வக்பு வாரிய தலைவர் பதவியில் இருந்து அப்துல் ரகுமான் ராஜினாமா செய்வதாக கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினார். அப்துல் ரகுமானின் வக்பு வாரிய உறுப்பினர் மற்றும் தலைவர் பதவி ராஜினாமா ஏற்கப்பட்டதாக தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை தெரிவித்திருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.