பழுதடைந்த பேருந்து நிழற்குடைகள்: ரூ.1 கோடியில் சீரமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், மாநகரப் பகுதியில் பழுதடைந்துள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைகளை ரூ.1 கோடியில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் 418 கி.மீ நீளத்துக்கு 488 பேருந்து தட சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் 1,265 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இதில் மாநகராட்சி சார்பில் நவீன நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான நிழற்குடை பகுதிகள் அசுத்தமாக காணப்பட்டன. மது போதையில் இருப்போர், மனநலம் பாதிக்கப்பட்டோர் நிரந்தரமாக வசிக்குமிடமாகவும் மாறியிருந்தது. நவீன நிழற்குடைகளில் இடம்பெற்றுள்ள பதாகைகளில் அரசின் சாதனை விளம்பரங்கள் மீது கட்சி மற்றும் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு அலங்கோலமாக காட்சியளித்தன.

இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்ற நிலையில், ஆணையர் ஜெ.குமரகுருபரன் உத்தரவின்படி, கடந்த ஆக.21ம் தேதி தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. அன்று ஒரே நாளில் 95.70 டன் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டன. 4 ஆயிரத்து 221 சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட 47 விளம்பரப் பதாகைகளும் அகற்றப்பட்டன. இந்த தீவிர தூய்மைப் பணியின் போது, எத்தனை நிழற்குடைகள் பழுந்தடைந்த நிலையில் உள்ளன என கணக்கெடுத்து, மாநகராட்சி தலைமைக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி, மாநகராட்சியின் 1 முதல் 8 வரையிலான மண்டலங்கள் மற்றும் 10, 11 ஆகிய மண்டலங்களில் 132 நிகழ்குடைகள் பழுதடைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. அதை சீரமைக்க ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் சுமார் ரூ.1 கோடியில் அவற்றை சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.