புதுடெல்லி: மக்களவைக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதன்பிறகு 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மார்ச்சில் அறிக்கை தாக்கல்: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்த அறிக்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
‘மக்களவைக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதன்பிறகு 100 நாட்களுக்குள் நாடு முழுவதும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என்பதே இந்த குழுவின் முக்கிய பரிந்துரை ஆகும்.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான சீர்திருத்தங்களை கொண்டு வந்து, அதை அமல்படுத்த ஒரு குழு அமைக்க வேண்டும் என்றும் ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரை செய்துள்ளது.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்: ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டம் குறித்து ஆலோசனை நடந்தபோது, 80 சதவீத மக்கள் இத்திட்டத் துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு ஏற்றது அல்ல. இது மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி. இத்திட்டம் வெற்றி பெறாது. இதை மக்கள் ஏற்க மாட்டார்கள். இதுகுறித்து யாராவது எங்களிடம் கருத்து கேட்டார்களா? இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த 80 சதவீத மக்கள் யார் என நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்’’ என்று தெரிவித்துஉள்ளார்.
ஆதரவு கிடைக்குமா?- ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த, அரசியலமைப்பு சட்டத்தில் குறைந்தது 6 திருத்தங்கள் செய்ய வேண்டும். இதற்கு நாடாளுமன்றத்தில் 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதன்பிறகு, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளும் இத்திட்டத்தை அங்கீகரிக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு தனி பெரும்பான்மை உள்ளது. ஆனாலும், 3-ல் 2 பங்கு ஆதரவு கிடைக்குமா என்பது தெரியவில்லை. மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 545. இதில் 3-ல் 2 பங்கு என்றால், 364 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், மக்களவையில் தே.ஜ.கூட்டணிக்கு 292 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது.
அதேபோல, மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 245. இதில் 3-ல் 2 பங்கு என்றால், 164 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், மாநிலங்களவையில் தே.ஜ கூட்டணிக்கு 112 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 85 ஆக உள்ளது. அதனால், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவது, மத்திய அரசுக்கு சவாலாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
ரூ.24,475 கோடிக்கு உர மானியம்: நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் ‘சந்திரயான்-4’ திட்டம், உர மானிய திட்டம், பிரதமரின் ஆஷா திட்டத்தை தொடர்வது ஆகியவற்றுக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2040-ம் ஆண்டுக்குள் நிலவில் விண்வெளி வீரர்களை தரையிறக்கி, அவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்புவதற்கான சந்திரயான்-4 திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின்கீழ், நிலவின் மேற்பரப்பில் இருந்து மண், பாறைகள் பூமிக்கு கொண்டுவரப்பட்டு ஆய்வு செய்யப்படும். இத்திட்டத்துக்கு ரூ.2,104 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2024-25-ம் ஆண்டு ராபி பருவ விவசாயத்துக்காக பாஸ்பேட், பொட்டாசிய உரங்களுக்கு ரூ.24,475 கோடி மானியம் அளிக்கும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் தேவையான உரங்களை விவசாயிகள் நியாயமான விலையில் பெற முடியும்.
பிஎம் ஆஷா திட்டம்: பிரதமரின் ‘ஆஷா’ திட்டத்தை ரூ.35,000 கோடி மதிப்பீட்டில் தொடரவும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலையை பெற முடியும். இந்த நிதி மூலம் அத்தியாவசிய பொருட்கள் விலையும் கட்டுப்படுத்தப்படும் என்பதால் நுகர்வோரும் பயனடைவார்கள். விவசாயிகள், நுகர்வோர் பயனடையும் வகையில், பிரதமரின் ஆஷா திட்டத்தின்கீழ் விலை ஆதரவு திட்டம் மற்றும் விலை கட்டுப்பாட்டு நிதி ஆகியவற்றை மத்திய அரசு ஒருங்கிணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பழங்குடியினர் மேம்பாடு: நாடு முழுவதும் உள்ள பழங்குடியினரின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த ரூ.79,156 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பிரதமரின் ஜன்ஜாதிய உன்னத் கிராம் திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.56,333 கோடி. மாநிலத்தின் பங்கு ரூ.22,823 கோடி. நாடு முழுவதிலும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 549 மாவட்டங்கள் மற்றும் 2,740 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
உயிரி தொழில்நுட்ப மேம்பாடு: உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிபுதுமை கண்டுபிடிப்பு, தொழில் முனைவு மேம்பாடு (பயோ-ரைடு) திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் உயிரி தொழில்நுட்ப துறை ஆராய்ச்சிகள் விரைவுபடுத்தப்படும். இது உயிரி தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி, மேம்பாட்டுக்கு உதவும்.