மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களை பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் நிர்வாகம் நிர்வகித்து வந்தது. அந்த நிறுவனத்தின் ஒப்பந்த காலம் 2028-ம் ஆண்டில் முடிவடைய உள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே தேயிலைத் தோட்டங்களை மூடிய ஆலை நிர்வாகம், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களை விருப்ப ஓய்வில் செல்ல அறிவுறுத்தியது.
தொழிலாளர்களை மலையில் இருந்து அப்புறப்படுத்தும் வகையில், வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதுடன், மின்சாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் நிறுத்தியதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். அதை ஏற்றுக் கொண்ட மனித உரிமை ஆணையம், விசாரணை நடத்துவதற்கான குழுவை அமைத்தது.
மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக துணை காவல் கண்காணிப்பாளர் ரவி சிங், ஆய்வாளர் யோகேந்திர குமார் திரிபாதி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழு இன்று நெல்லை வந்து சேர்ந்தது. விசாரணைக் குழுவினர், தொழிலாளர் நலத் துறையின் தோட்டங்கள் பிரிவு உதவி ஆணையர் விக்டோரியா மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் இளையராஜா ஆகியோரிடம் இன்று விசாரணை நடத்தினர்.
அரசினர் சுற்றுலா மாளிகையில் அதிகாரிகளிடம் நடந்த விசாரணைக்குப் பின்னர் புகார் அளித்திருந்த டாக்டர்.கிருஷ்ணசாமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் தன்னிடம் இருந்த ஆவணங்களையும் குழுவிடம் சம்ர்ப்பித்தார். பின்னர் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொள்வதற்காக அங்கு புறப்பட்டுச் சென்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரி ரவி சிங், ”மாஞ்சோலை வனப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தின் புகார் அளிக்கப்பட்டது அதனடிப்படையில் நாங்கள் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உள்ளோம்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தங்களிடம் உள்ள தகவல்களையும் ஆவணங்களையும் எங்களிடம் தரலாம். மாவட்ட நிர்வாகம் சார்பாக சில ஆவணங்கள் கொடுத்துள்ளனர். இந்த பிரச்னை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களையும் ஒப்படைத்துள்ளனர்
புகார்தாரரான கிருஷ்ணசாமியிடமும் விசாரணை நடத்தப்பட்டு அவரிடம் உள்ள ஆவணங்கள் பெறப்பட்டுள்ளது. நேரடியாக மாஞ்சோலை சென்று விசாரணை நடத்த உள்ளோம். அத்துடன், பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் நிறுவன அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படும் அதற்காக அந்த நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.