பமாகோ,
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதோடு அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுக்களும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதனால் அந்த நாடு பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதார மட்டங்களில் ஆழ்ந்த பன்முக நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மாலியின் தலைநகரில் உள்ள ராணுவப் பயிற்சி முகாம் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு ராணுவத்தின் தகவல் தொடர்பு சேவையின் துணை இயக்குனர் கர்னல் மரிமா சாகரா கூறுகையில், பமாகோவில் உள்ள ஜென்டர்ம் பயிற்சி பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் கிடைத்துள்ளது. ஆனால் அதற்கு மேல் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறினார்.
தாக்குதல் நடத்தப்பட்ட இந்த ராணுவ பயிற்சி பள்ளி நகரின் எல்லையில் அமைந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் யார், எத்தனை பேர் இருந்தனர், நிலைமை கட்டுக்குள் உள்ளதா என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மாலி, அதன் அண்டை நாடுகளான புர்கினா பாசோ மற்றும் நைஜருடன் சேர்ந்து, ஆயுதக் குழுக்களின் கிளர்ச்சியை எதிர்த்துப் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.