கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவின்போது இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவும், தன்னார்வலர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கவும் பெரும் தொகை செலவுப்செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கேரளாவின் ஆளும் கட்சியான சி.பி.எம் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளது.
கேரள மாநில சி.பி.எம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
“வயநாடு புனர் நிர்மாண பணிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எதிர்கட்சியான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகளும், சில மீடியாக்களும் பொய் பிரசாரம் செய்கின்றன. வயநாடு நிலச்சரிவில் ஈடு செய்யமுடியாத துயரம் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மனிதர்களும், பொருள்களும் நஷ்டப்பட்டுள்ளன. வயநாட்டில் புனர்நிர்மாண பணியை கேரள அரசு முன்மாதிரியாகவும், பாராட்டும் வகையிலும் செய்துள்ளது. வயநாட்டின் புனர் நிர்மாணத்துக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியின் விதிமுறைகளின்படி கேரளா கோரியுள்ள தொகையை வழங்க வேண்டும் என மாநில அரசு கோரியுள்ளது. வயநாட்டின் மறுவாழ்வுக்கான விரிவான கோரிக்கை மனு அளிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியதையும் கருத்தில்கொண்டுதான் இப்படி ஒரு மனு தயார் செய்யப்பட்டது. கடந்த காலங்களில் ஏற்பட்ட பேரிடர்களின்போது மாநில அரசு மத்திய அரசுக்கு சமர்ப்பித்த மனுவை முன்மாதிரியாகக் கொண்டுதான் இப்போதும் மனு தயாரிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 1,202 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு அளித்துள்ள மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. வயநாடு நிலச்சரிவு துயரம் நடந்து 50 நாள்கள் கடந்த பின்னரும் ஒரு ரூபாய் கூட மத்திய அரசு வழங்காத விஷயத்தை மறைத்து வைத்துக் கொண்டு கட்டுக்கதைகளை பிரசாரம் செய்கிறார்கள். கேரள மாநிலத்தைப் போன்று இயற்கை பேரிடர்கள் பாதித்த மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசின் உதவி அனுமதிக்கப்பட்ட போதும், கேரள மாநிலத்தை அலட்சியம் செய்யும் நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது.
மத்திய அரசுக்கு அளித்துள்ள மனுவின் உள்ளடக்கத்தை மாநில அரசு செலவழித்த தொகை என்ற வகையில் இப்போது பிரசாரம் செய்கிறார்கள். ஒரு சில வலதுசாரி மீடியாக்களும், எதிர்க்கட்சியான காங்கிரஸ், மற்றும் பாஜக தலைமையில் கேரளத்துக்கு எதிராகவும், வயநாடு மறுவாழ்வை சீர்குலைக்கும் வகையிலும், மத்திய அரசின் உரிய உதவி கிடைக்காமல் செய்வதற்கும் நடக்கும் பொய் பிரசாரத்தை கண்டித்து இம்மாதம் 24-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பொதுமக்களை இணைத்து போராட்டம் நடத்த உள்ளோம்” இவ்வாறு சி.பி.எம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.