ஹரியாணா தேர்தல்: முதியோர் உதவித் தொகையாக ரூ. 6,000 வழங்கப்படும் – காங்கிரஸ் வாக்குறுதி

புதுடெல்லி: ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, முதியோர் உதவித்தொகையாக ரூ. 6,000 வழங்கப்படும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கப்படும், ரூ. 25 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் உள்ளிட்ட முக்கிய 7 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், ஹரியாணா வாக்காளர்களை கவரும் நோக்கில் 7 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, ஹரியாணா காங்கிரஸ் தலைவர் உதய் பன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம் வழங்கப்படும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். கிரீமி லேயரின் வருமான வரம்பை ரூ. 6 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தப்படும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், ஊனமுற்றோர் மற்றும் விதவைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. 6,000 வழங்கப்படும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும், வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், ரூ. 25 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, “இந்த 7 வாக்குறுதிகளை நாங்கள் செயல்படுத்துவோம். இந்த ஏழு உத்தரவாதங்களைத் தவிர, எங்கள் கட்சியின் 53 பக்க தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பிற வாக்குறுதிகள் குறித்து சண்டிகரில் விரிவாக விளக்கப்படும்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.