Doctor Vikatan: நான் ஆர்.ஹெச் நெகட்டிவ் ரத்தப் பிரிவைச் சேர்ந்தவள். முதல்முறையாக கர்ப்பமாக இருக்கிறேன். ஆர்.ஹெச் ரத்தப் பிரிவைச் சேர்ந்த கர்ப்பிணிகள், மிகவும் கவனமாக இருக்க வேண்டும், அந்த ரத்தப் பிரிவால், பிறக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றெல்லாம் சொல்லப்படுகிறதே… அதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை… நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப் புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா.
கர்ப்ப காலத்தில் எல்லாப் பெண்களும் ரத்தப் பிரிவை செக் செய்ய வேண்டியது மிக மிக அவசியம். கணவரின் ரத்தப் பிரிவையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆர்.ஹெச் பாசிட்டிவ் ரத்தப்பிரிவு உள்ள கர்ப்பிணிகளுக்கு கர்ப்பகால சிக்கல்கள் எதுவும் வர வாய்ப்பில்லை. அதுவே அந்தப் பெண்ணுக்கு ஆர்.ஹெச் நெகட்டிவ் ரத்தப் பிரிவும் கணவருக்கு பாசிட்டிவ் ரத்தப் பிரிவும் இருந்தால் குழந்தையும் பாசிட்டிவ் ரத்தப் பிரிவுடன் பிறக்க 50 சதவிகித வாய்ப்புகள் உண்டு.
அம்மாவின் ரத்தப் பிரிவு நெகட்டிவ், குழந்தையின் ரத்தப் பிரிவு பாசிட்டிவ் என்ற பட்சத்தில் பாசிட்டிவ் அணுக்களுக்கு அம்மாவின் உடலில் ஆன்டிபாடி உருவாகும். தாய்வழியே குழந்தைக்கு ரத்தம் மூலம் ஊட்டச்சத்துகள் செல்லும்போது குழந்தைக்கு ரத்தச்சோகை ஏற்படலாம். இந்தப் பிரச்னைக்கு ‘ஆர்.ஹெச் ஐசோஇம்யூனைஸேஷன் (Rh Isoimmunization) என்று பெயர்.
முதல் பிரசவத்தில் பாதிப்புகள் குறைவாக இருக்கலாம். அடுத்தடுத்த பிரசவங்களில் பாதிப்புகள் கூடிக்கொண்டே போகும். அதாவது முதல் பிரசவத்தில் குழந்தை பிறந்த 24 மணி நேரத்தில் மஞ்சள்காமாலை பாதித்து போட்டோதெரபி கொடுக்கப்பட்டிருக்கலாம். அதுவே இரண்டாவது குழந்தைக்கு தாயின் வயிற்றில் வளரும்போதே ரத்தச்சோகை வந்து, குழந்தை வீங்கி, பிரசவத்தின்போதே இன்ட்ரா யூட்ரைன் பிளட் டிரான்ஸ்ஃபியூஷன் தேவைப்படலாம். இதைத் தவிர்க்க ஆன்டி டி (Anti-D Injection) என்ற ஊசி இருக்கிறது.
அம்மாவுக்கு ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தப் பிரிவும் அப்பாவுக்கு பாசிட்டிவ் ரத்தப்பிரிவும் இருந்தால் கர்ப்பத்தின் இடையிலோ, குழந்தை பிறந்த உடனேயோ அல்லது அபார்ஷன் ஆன நிலையிலோ ஆன்டி டி ஊசி போடப்படும். குழந்தை பிறந்ததும் அதற்கு ஹீமோகுளோபின் அளவும் மஞ்சள்காமாலையும் எவ்வளவு என்பது பார்க்கப்பட வேண்டும். குழந்தை பிறந்த 90 நாள்களுக்குத்தான் இந்தப் பிரச்னை இருக்கும். அதன் பிறகு குழந்தை முழுமையாக குணமாகிவிடும்.
பொதுவாக, கர்ப்பம் உறுதியான நிலையில், எல்லாப் பெண்களுக்கும் ரத்தப் பரிசோதனை செய்யப்படும். அந்தப் பெண்ணுக்கு ஆர்.ஹெச் நெகட்டிவ் ரத்தப் பிரிவு இருப்பது தெரிந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை மகப்பேறு மருத்துவரே வழிகாட்டுவார். உங்கள் விஷயத்தில் உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் இது குறித்து ஆலோசனை செய்யுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.