பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகச் செயல்பட்டு வந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் பெரம்பூரில் வீட்டருகே படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில், பல ரவுடிகளின் பெயர்கள் அடிபட்ட அதேவேளையில், பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் அந்தப் பட்டியலில் சேர்ந்தது.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவரைக் கட்சியிலிருந்து நீக்குமாறும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், “செல்வப்பெருந்தகை இதற்கு முன் 2008 முதல் 2010 வரை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராகச் செயல்பட்டிருக்கிறார். இதுமட்டுமல்லாமல், புரட்சி பாரதம், புதிய தமிழகம் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளிலும் இருந்திருக்கிறார். ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் இவர்மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. மேலும், இவர் வட தமிழகத்தில் ரியல் எஸ்டேட் பிசினஸ் உள்ளிட்டவற்றில் ரவுடி கும்பல்களை பயன்படுத்தியிருக்கிறார்.
ரவுடி கும்பல் தலைவர் நாகேந்திரன் ஆயுள் தண்டனையில் வேலூர் சிறையில் இருக்கிறார். அவரின் மகன் ரவுடி அஸ்வத்தாமன் தான் தமிழக இளைஞர் காங்கிரஸின் முதன்மைச் செயலாளர். இவர், நாகேந்திரனுக்கும், செல்வப்பெருந்தகைக்கும் நிறைய வேலைசெய்திருக்கிறார். இளைஞர் காங்கிரசில் அந்தப் பதவியில் அவரை நியமித்ததும் செல்வப்பெருந்தகைதான். மேலும், இவர் கொலை மிரட்டல் விடுவது, தொழிலதிபர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவது என பல செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். அதில் வரும் பணத்தை செல்வப்பெருந்தகையுடன் ஷேர் செய்திருக்கிறார். இதுபோன்ற ரவுடி கும்பலின் உதவியுடன் செல்வப்பெருந்தகை இந்தக் கொலை சம்பவத்துக்குத் திட்டம் தீட்டியிருக்கிறார்.
தற்போது தமிழக மக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பலரின் கேள்வி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகை ஏன் இன்னும் கைதுசெய்யப்படவில்லை? ஏனெனில், ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் என்பதால் காவல்துறை தயக்கம் காட்டுகிறது. எனவே, செல்வப்பெருந்தகையை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்படி நீக்கினால்தான் தமிழக மக்கள் மத்தியில் காங்கிரஸின் மதிப்பு நீடிக்கும்” என்று ராகுல் காந்திக்கு ஜெய்சங்கர் வலியுறுத்தியிருக்கிறார்.