நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் தெரிவித்திருந்தது. இது பேசுப்பொருளாக மாறியது. இந்தத் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒரே நாடு ஒரே திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அதில், “இந்திய தேர்தல் முறையானது பன்முகத் தன்மை கொண்டது. இதனை புறக்கணிக்கிறது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம். இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு இந்தத் திட்டம் குந்தகம் விளைவிக்கும். ஆகையால் நடைமுறையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்பது சாத்தியமே இல்லாதது. பாஜக தனது சுய கவுரவத்துக்காக இத்தகைய ஒரே நாடு ஒரே திட்டத்தை கொண்டுவர முயற்சிக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்தவே முடியாது. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு சமமானப் பகிர்வுகளை வழங்குதல் ஆகிய பிரச்சனைகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார்.