ஜெருசலேம்: ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதலால் காசா மீது போர் தொடுத்த இஸ்ரேல், தற்போது லெபனான் மற்றும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது கவனத்தை செலுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் 7-ம்தேதி தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 251 பேர் காசாவுக்கு பிணைக் கைதிகளாக கடத்தி செல்லப்பட்டனர். இதனால் காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிக்க இஸ்ரேல் போர் தொடுத்தது.
இந்நிலையில் காசாவுக்கு ஆதரவாக இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கும் இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் லெபனானில் 2 நாட்களுக்கு முன்பு ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்திய பேஜர்கள் வெடித்துச் சிதறின. இதில் 12 பேர் உயிரிழந்தனர், 3,000 பேர் காயம் அடைந்தனர். நேற்று முன்தினம் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்திய வாக்கி டாக்கிகளும் வெடித்துச் சிதறின. இதில் 20 பேர் உயிரிழந்தனர். 450 பேர் காயம் அடைந்தனர்.
லெபானானில் வெடித்த வாக்கி டாக்கி ஒன்றில் ஜப்பானின் ஐகாம் நிறுவனத்தின் லோகோவுடன் ஸ்டிக்கர் இருந்தது. இதையடுத்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘இந்த செய்தி ஆச்சர்யம்அளிக்கிறது. இது எங்கள் தயாரிப்பா என்பதை உறுதிபடுத்த முடியவில்லை. சந்தையில் எங்கள் நிறுவனத்தின் பெயரில் போலி தயாரிப்புகள் அதிகம் விற்கப்படுகின்றன. லெபானானில் வெடித்த ஐசி-வி82 மாடல் வாக்கி டாக்கிகள் மற்றும் பேட்டரிகளின் தயாரிப்பை நாங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டோம்’’ என தெரிவித்துள்ளது.
பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல்இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு உடனடியாக சிறப்பான தண்டனையை கொடுப்போம் என ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதனால் இஸ்ரேல் தனது கவனத்தை லெபானான் மற்றும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது திருப்பியுள்ளது. இது குறித்துஇஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யாவ் கேலன்ட் தனது படையினரிடம் பேசுகையில், ‘‘போரில்நாம் புதிய கட்டத்தை தொடங்கியுள்ளோம். அதற்கு தைரியம், உறுதி, விடாமுயற்சி ஆகியவை தேவை’’ என்றார்.
ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் செல்போன் பயன்பாட்டை குறைத்து, தங்களின் தகவல் தொடர்புக்கு பேஜர்களை பயன்படுத்தி வந்தனர். இதனால் அவர்களின் தகவல்தொடர்பில் இடையூறு ஏற்படுத்தவும், ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் லெபனான் மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தவும் இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியிருக்கலாம் எனத் தெரிகிறது. ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் ராக்கெட் தாக்குதலால் வடக்குஇஸ்ரேலில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் மீண்டும் தங்கள் இருப்பிடத்துக்கு திரும்ப ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் ஒழிக்கப்பட வேண்டும். இதனால் இஸ்ரேலின் போர் தற்போது ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை நோக்கி விரிவடைந்துள்ளது.