கொல்கத்தா: கொல்கத்தா சுகாதாரத் துறையின் தலைமையகமான ஸ்வஸ்தயா பவன் முன்பு இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அங்கிருந்து பந்தல், மின்விசிறிகளை அகற்றும்படி, பந்தல் போட்டவர்களுக்கு வெளிப்புறத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதாக மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டி இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந் தநிலையில், போராட்டத்தின் போது சிறிது இளைப்பார போடப்பட்டிருந்த பந்தல், மின்விசிறி போன்ற பொருள்களை பந்தல் அமைப்பாளர்கள் அகற்றியுள்ளனர். இது குறித்து போராட்டம் நடத்தி வரும் இளநிலை மருத்துவர்கள் கூறும்போது, “இது எங்களை மனச்சோர்வடையச் செய்யும் முயற்சி என்று தோன்றுகிறது. ஆனால் ஒரு போராட்டம் நடத்துவதற்கு இதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறோம். இது எல்லாம் எங்களுக்கு தேவையில்லை. எந்த இடத்தில் இருந்தும், எந்த வகையிலும் எங்களால் எதிர்ப்பை தெரிவிக்க முடியும்” என்றனர்.
கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு நீதி வேண்டியும், பணியிடத்தில் பாதுகாப்பான பணிச்சூழல் வேண்டியும், சுகாதார பணியாளர்களை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கும் ஊழல் முறைகளுக்கு காரணமான மூத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
2-ம் சுற்றுபேச்சு தோல்வி: போராட்டம் நடத்தும் இளநிலை மருத்துவர்கள், மேற்கு வங்க அரசு அதிகாரிகளுக்கு இடையில் புதன்கிழமை இரவு நடந்த இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை, விவாதத்தின் மினிட்ஸ்களை எழுத்துபூர்வமாக வெளியிட அரசு மறுத்ததை அடுத்து தோல்வியில் முடிந்தது. போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் மருத்துவர் அனிகேத் மஹாதோ கூறுகையில், “பேச்சுவார்த்தை சுமுகமாக சென்று கொண்டிருந்தது. ஆனால் விவாதிக்கப்பட்ட விஷயங்களை எழுத்துபூர்வமாக, அதிகாரபூர்வமாக வழங்க அரசு மறுத்தது எங்களுக்கு ஏமாற்றம் அளித்தது. எங்களுடைய பாதுகாப்பு குறித்து எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும்” என்றார்.
இதனிடையே, மாநில அரசால் உரியவர்கள் கையெழுத்திடாமல் வெளியிடப்பட்ட கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களின் சுருக்க அறிக்கை சீர்திருத்தத்தின் தேவையை ஒப்புக்கொள்கிறது. என்றாலும், எங்களின் கோரிக்கைகள் எழுத்துபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத வரை போராட்டம் தொடரும் என இளநிலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, முதல்வர் மம்தா பானர்ஜியுடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. பொதுமக்களின் நலன்கருதி மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தினார். போலீஸ் கமிஷனர், சுகாதார அதிகாரிகளை மற்ற வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும், மருத்துவர்கள் தங்களின் எழுத்துபூர்வமான உத்திரவாதம் என்ற கோரிக்கையில் உறுதியாக உள்ளனர்.