மலப்புரம்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 175 பேருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால்பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவிவருகிறது. இங்கு 175 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 74 பேர் சுகாதார பணியாளர்கள். இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:
நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 126 பேர் தீவிர பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 49 பேருக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 104 பேருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்படுகிறது. மாஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 13 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
நிபா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் வீட்டை சுற்றி 3 கி.மீ தூரத்தில் வசிப்பவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்பதை பரிசோதிக்க 66 குழுக்களை சுகாதாரத்துறை அமைத்துள்ளது.
மலப்புரம் மாவட்டத்தில் 2 பஞ்சாயத்துகளில் உள்ள 5 வார்டுகள்கட்டுப்பாட்டு மண்டலங்களாகஅறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகளவில் கூட வேண்டாம் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள கடைகளை மாலை 7 மணிக்கு அடைக்கும்படி மாவட்ட அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அதேபோல் இங்குள்ள பள்ளி, கல்லூரிகள், சினிமாதியேட்டர்கள், மதரஸாக்கள், அங்கன்வாடிகள், டியூஷன் மையங்கள் ஆகியவற்றை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்கள் முககவசம் அணியும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். திருமணம், துக்க நிகழ்ச்சிகளில் அதிகம் பேர் பங்கேற்க வேண்டாம்எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுஉள்ளனர். இவ்வாறு அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.