திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பச்சாம்பேட்டை வாழைத்தோப்பில் சீட்டு விளையாடியவர்களை, தனிப்படை போலீஸார் பிடித்து லால்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்படி, சீட்டு விளையாடிய 9 நபர்கள் கைது செய்யப்பட்டு, காவல் நிலைய சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்தச் சோதனையின்போது, சீட்டு விளையாடிய ஒருவரின் கையில் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்ச் மற்றும் அவரின் காரில் இருந்த ரூ.2 லட்சம் பணத்தை தனிப்படை எஸ்.ஐ வினோத் எடுத்துள்ளார். அதை பறிமுதல் செய்த கணக்கில் காட்டாமல் தானே வைத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், வாட்ச்சையும், பணத்தையும் பறிகொடுத்தவர் லால்குடி காவல் நிலைய ஆய்வாளரிடம் முறையிட, அவர் நடத்திய விசாரணையில், தனிப்படை எஸ்.ஐ வினோத், ரோலக்ஸ் வாட்ச் மற்றும் 2 லட்சம் ரூபாயை தானே வைத்துக் கொண்டது தெரியவந்தது.
இந்த தகவலை அறிந்த திருச்சி எஸ்.பி வருண்குமார், வாட்ச் மற்றும் பணத்தை ‘அமுக்கிய’ தனிப்படை எஸ்.ஐ வினோத், போலீஸார் சுசீந்திரன், பிரபு ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். ஏற்கெனவே எஸ்.ஐ வினோத் துவரங்குறிச்சியில் பணியாற்றியபோது, பறிமுதல் செய்த பணத்தை தானே ‘பதுக்கிய’ குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சீட்டாட்டம் நடத்த உறுதுணையாக இருந்து, சீட்டாடுபவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, பணம் பெற்று வந்த, லால்குடி எஸ்.பி தனிப்பிரிவு ஏட்டு மோகன் என்பவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி, திருச்சி எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். இவர், ஏற்கெனவே லால்குடி காவல் நிலையத்தில் பல தவறான செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.