புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் 21 முதல் 23 வரை அரசு முறை பயணமாக அமெரிக்காவில் இருப்பார் என வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் குறித்து ஊடகங்களுக்கு விளக்கிய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, “பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 21 முதல் 23 வரை அமெரிக்காவில் இருப்பார். ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்கால உச்சி மாநாட்டுக்காக நியூயார்க் செல்வதற்கு முன், குவாட் உச்சி மாநாட்டுக்காக பிரதமர் மோடி நேரடியாக டெலாவேரில் உள்ள வில்மிங்டனுக்குச் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது அமெரிக்காவாழ் இந்தியர்களோடு பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். மேலும், தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் அவர் சந்திப்புகளை நடத்துவார். அதோடு, பல்வேறு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் பிரதமர் மோடி நடத்துவார்” என தெரிவித்தார்.
முன்னாள் அமெரிக்க அதிபரும், குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளருமான டொனால்டு ட்ரம்ப், மோடியை சந்திப்பார் என்று அறிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த விக்ரம் மிஸ்ரி, “டொனால்டு ட்ரம்ப் உடனான சந்திப்பு தொடர்பாக எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை. அவர்கள், அமெரிக்காவில் பல்வேறு சந்திப்புகளுக்கு முயல்கிறார்கள். அவை உறுதிப்படுத்தப்பட்டவுடன், அது குறித்து தெரிவிக்கிறேன்” என கூறினார்.