பெரூட்,
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.
இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 105 பேரை மீட்டது. மேலும், அதிரடி மீட்பு நடவடிக்கை மூலம் பணய கைதிகள் 8 பேரை இஸ்ரேல் மீட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
ஆனால், 100க்கும் மேற்பட்டோர் இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அதேபோல், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் இஸ்ரேல் மீது ஏவுகணை, ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனால், இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள லெபனானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் தாக்குதலால் இஸ்ரேலின் வடக்கு எல்லையில் வசித்து வந்த மக்கள் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இதனிடையே, இடம்பெயர்ந்துள்ள மக்களை மீண்டும் வடக்குப்பகுதியில் குடியமர்த்துவதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது. ராணுவ நடவடிக்கை மூலம் வடக்கு எல்லை பகுதியில் அமைதியை நிலைநாட்டி மக்களை குடியமர்த்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதனால் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், நேற்று ஒரேநேரத்தில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் பயன்படுத்தி வரும் பேஜர்கள் வெடித்தன. இதனால் ஒட்டுமொத்த லெபனானும் மிரண்டுள்ளது.
பேஜர் என்பது தகவல் தொடர்பு கருவியாகும். இந்த கருவியை ஹேக் செய்வது மிகவும் கடினமானது. செல்போன்களை ஹேக் செய்து இருப்பிடம், தகவல்களை இஸ்ரேல் கைப்பற்றிவிடும் என்று கருதிய ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் பேஜர்களை பயன்படுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள் தவிர அரசு அதிகாரிகள் உள்பட மேலும் சிலரும் இந்த பேஜரை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், நேற்று மாலை 3.15 மணிக்கு லெபனான் முழுவதும் பேஜர்கள் மர்மமான முறையில் வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 ஆயிரத்து 750 பேர் படுகாயமடைந்தனர். இதில், 200க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பேஜர்கள் மர்மமான முறையில் வெடித்து சிதறியதன் பின்னணியில் இஸ்ரேல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேம்ஸ் பாண்ட் படத்தை மிஞ்சும் வகையில் நடந்த இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் ஆவர். லெபனானுக்கான ஈரான் தூதரும் இந்த பேஜர் வெடிப்பில் காயமடைந்துள்ளார். பேஜர்கள் வெடித்ததில் கை,கால், வயிற்றுப்பகுதியில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பேஜர் வெடிப்பு சம்பவமும், பின்னணியில் இஸ்ரேலின் மொசாட்டும்…
பேஜர் வெடிப்பு சம்பவத்தில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே 5 ஆயிரம் பேஜர்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளனர்.
தைவானை சேர்ந்த கோல்ட் அப்பலோ என்ற நிறுவனம் இந்த பேஜர்களை தயாரித்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த பேஜர்களை நாங்கள் தயாரிக்கவில்லை என்றும் ஐரோப்பாவில் உள்ள ஒருநாட்டில் தங்கள் பெயரை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள பிஎசி என்ற நிறுவனம் இந்த பேஜர்களை தயாரித்துள்ளதாக கோல்ட் அப்பலோ தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பேஜர்கள் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த பேஜர் மூலம் மெசேஜ் மட்டுமே அனுப்ப, பெற முடியும், பேச முடியாது.

இந்த பேஜரில் இஸ்ரேலின் மொசாட் அமைப்பினர் வெடிக்கும் போர்டு கருவி ஒன்றை பொருத்தியுள்ளனர். அதில், 3 கிராம் அளவிற்கு வெடிமருந்தை நிரப்பியுள்ளனர். பேஜர்கள் உற்பத்தி செய்யப்பட்ட இடத்திலேயே வெடிமருந்து நிரப்பப்பட்டுள்ளது.
பேஜரில் கடவுச்சொல் (Code) வந்த உடன் வெடிக்கும் வகையிலான போர்டு கருவியை மொசாட் பொருத்தியுள்ளது. 3 ஆயிரம் பேஜர்களில் இந்த வெடிக்கும் போர்டு பொருத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று மாலை 3.15 மணிக்கு குறிப்பிட்ட கடவுச்சொல் பேஜரின் திரையில் வந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக சூடான பேஜர் அடுத்த சில வினாடிகளில் வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 ஆயிரத்து 750 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் லெபனான் மட்டுமின்றி உலக நாடுகளையே அதிரச்செய்துள்ளது. அதேவேளை, இச்சம்பவம் குறித்து இஸ்ரேல் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.