சென்னை: சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேகமாறுபாடு காரணமாக இன்று (செப்.19) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20 முதல் 24-ம் தேதி வரைஓரிரு இடங்களில் மிதமான மழைபெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும்புறநகர் பகுதிகளில் இன்று வானம்ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. தென் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 2 செமீ, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 22-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.