சென்னை: தமிழக அரசின் 11 துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் முத்திரை திட்டங்கள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி, திட்டப் பணிகளை முடித்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.
தமிழக அரசின் நெடுஞ்சாலை, பள்ளிக்கல்வி, மின்சாரம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சுகாதாரம், சமூக நலம் உள்ளிட்ட முக்கியமான 11 துறைகளின் கீழ்வரும் திட்டங்கள் முக்கியமான திட்டங்கள் முத்திரை திட்டங்கள் என்ற அடிப்படையில், அவற்றின் முன்னேற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வபோது ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில், இன்று (செப்.19) தலைமைச்செயலகத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் முத்திரை திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தலைமைச்செயலர் நா.முருகானந்தம் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள், துறைத்தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், மின்துறை உள்ளிட்ட ஒவ்வொரு துறைகள் சார்பிலும் செயல்படுத்தப்படும் முத்திரை திட்டங்கள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். அத்துடன், பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினார். இந்நிலையில், ஆய்வுக்கூட்டம் தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: “முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் முத்திரை திட்டங்களின் நிலை குறித்து தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆய்வு செயயப்பட்டது.
நெடுஞ்சாலைப்பணிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானப்பணிகள், மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முத்திரைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது தொடர்பாக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் ஆய்வுகளைச் செய்திருந்த நிலையில், அப்போது அளித்த ஆலோசனைகளின் படி முத்திரைத் திட்டங்களுக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து அதிகாரிகள், அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
மேலும், இந்த திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவற்றை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்த ஆலோசனைகளை இந்த கூட்டத்தில் வழங்கப்பட்டது,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.