அமராவதி: திருப்பதி பெருமாள் கோயில் பிரசாதமான லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு இருந்ததாக மத்திய அரசின் ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கால்நடை மற்றும் உணவு ஆய்வு நிறுவனம் குஜராத்தில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், திருப்பதி திருமலை பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படும் லட்டுக்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருந்ததா என்பது குறித்து கடந்த ஜூலையில் ஆய்வு செய்துள்ளது. அதன் ஆய்வு முடிவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கொழுப்பு ஆகியவற்றின் தடயங்கள் இருக்கின்றன” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, அமராவதியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, “திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் புனிதமானது. ஆனால் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் அங்கு கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில், விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் வெட்கப்பட வேண்டும். திருமலையின் ஒவ்வொரு அம்சமும் ஜெகன் அரசால் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. திருப்பதி லட்டுவின் தரம் முற்றிலுமாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், உடனடியாக சுத்தமான நெய்யை பயன்படுத்த உத்தரவிட்டோம்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவின் மகனும் ஆந்திரப் பிரதேச ஐடி அமைச்சருமான நார லோகேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரசுவாமி கோயில் மிகவும் புனிதமான கோயில். ஜெகன் மோகன் ரெட்டி நிர்வாகம், நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். அவர்களின் அரசு, மக்களின் மத உணர்வுகளை மதிக்கவில்லை” என விமர்சித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் நாடாளுமன்றக் குழு தலைவருமான சுப்பா ரெட்டி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “திருமலையின் புனிதத்தையும், பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் சேதப்படுத்தி சந்திரபாபு நாயுடு பெரும் பாவம் செய்துள்ளார். திருமலை பிரசாதம் குறித்த சந்திரபாபு நாயுடுவின் கருத்து மிகவும் மோசமானது. மனிதப் பிறவியில் பிறந்த எவரும் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சொல்ல மாட்டார்கள்.
அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்ய சந்திரபாபு நாயுடு தயங்க மாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில், திருமலை பிரசாதம் விஷயத்தில் நானும், எனது குடும்பத்தினரும் அந்த கடவுளின் சாட்சியாக சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்துடன் சத்தியம் செய்யத் தயாரா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார். திருப்பதியில் தினமும் மூன்று லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை தயாரிக்க கோயில் அறக்கட்டளை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் இ-டெண்டர்கள் மூலம் அதிக அளவில் நெய்யை வாங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.