புது டெல்லி: “பொதுமக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட உங்களின் தோல்வியடைந்த பொருளை மெருகேற்றும் முயற்சியில் நீங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளீர்கள்” என ராகுல் காந்தி குறித்து காட்டமாக விமர்சித்து மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “பொதுமக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட உங்களின் தோல்வியடைந்த பொருளை மெருகேற்றும் முயற்சியில் நீங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளீர்கள். அரசியல் அழுத்தம் காரணமாக அதனை சந்தைப்படுத்துகிறீர்கள். நீங்கள் எழுதிய கடிதத்தை படித்த பிறகு, அதில் நீங்கள் குறிப்பிட்ட விஷயங்கள் யதார்த்தத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பதை உணர்ந்தேன். அந்தக் கடிதத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட உங்கள் தலைவர்களின் தவறுகளை நீங்கள் மறந்துவிட்டீர்கள் அல்லது வேண்டுமென்றே மறைத்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். ஆகவே அந்த விஷயங்களை விரிவாக உங்களது கவனத்துக்கு கொண்டு வருவது முக்கியம் என கருதுகிறேன்.
நாட்டின் பழமையாக அரசியல் கட்சி அதன் இளரவசரின் அழுத்தம் காரணமாக தற்போது ‘காப்பி பேஸ்ட்’ காட்சியாக மாறியுள்ளது வருத்தமளிக்கிறது. ஒவ்வொரு நாளும் தோல்வியடைந்த பொருளை மகிமைப்படுத்த வேண்டும் என்ற உங்களின் கட்டாயம் எனக்கு புரிகிறது. ஆனால், காங்கிரஸ் தலைவராக இருந்தாலும் குறைந்த பட்சம் உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்திருக்க வேண்டும்” என அந்த கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார் நட்டா. மேலும், “பிரதமர் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஓபிசி சமூகத்தையும் இழிவுபடுத்திய ஒரு நபரை ஏன் நியாயப்படுத்த முயற்சிக்கிறீர்கள்” என்றும் நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல், கூறிய கருத்துக்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள் ரவ்நீத் சிங் பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பாஜகவினருக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுங்கள்” என குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது கார்கேவுக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.