சென்னை: பணிச்சுமையால் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய தனது மகள் உயிரிழந்து விட்டதாக பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் எழுதிய கடிதம் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது. இந்நிலையில், இது குறித்து விசாரிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தனது 26 வயது மகள் எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) நிறுவனத்தில் பணியாற்றி பணிச்சுமையால் உயிரிழந்ததாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மகளின் இறுதிச்சடங்குக்கு கூட நிறுவன தரப்பில் இருந்து யாரும் வரவில்லை என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“அன்னா செபாஸ்டியனின் உயிரிழந்ததை அறிந்து வருந்துகிறோம். நீதியை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அந்த வகையில் இந்த விவகாரத்தை தொழிலாளர் நலன் அமைச்சகம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. பாதுகாப்பற்ற மற்றும் பணிச்சுமை குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்படும்” என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பணிச்சுமையால் பெண் ஊழியர் உயிரிழந்தது அதிர்ச்சி தருவதாகவும். இதற்கு முறையான விசாரணை வேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பதில் அளித்திருந்தார்.
கடந்த ஜூலை 20-ம் தேதி அன்னா உயிரிழந்தார். இதையடுத்து அவரது தயார் அனிதா எழுதிய கடிதம் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது. அதில் தனது மகளை போல வேறு யாரும் பாதிக்கப்படக் கூடாது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தங்கள் நிறுவனம் ஊழியர்களின் நலனில் அதிக முக்கியத்துவம் செலுத்துவதாகவும். இந்தியாவில் பணியாற்றும் ஒரு லட்சம் ஊழியர்களிடத்திலும் அது உறுதி செய்யப்படும் என எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.