பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு டெல்லியைச் சேர்ந்த மாஃபியா கும்பல் தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்ந்து மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கிறார். அவரது மிரட்டல் காரணமாக சல்மான் கானுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு சல்மான் கான் வெளியில் செல்லும்போது குண்டு துளைக்காத கார் பயன்படுத்தி வருகிறார். சல்மான் கானை கொலைசெய்யவும் லாரன்ஸ் பிஷ்னோய் ஆட்கள் முயற்சி மேற்கொண்டனர். கடந்த ஏப்ரல் மாதம் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இத்துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று சல்மான் கான் தந்தை சலீம் கானை, பர்தா அணிந்த ஒரு பெண் மிரட்டி இருக்கிறார். சலீம் கான் வழக்கமாக தனது வீட்டில் இருந்து காலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். நேற்று வழக்கம் போல் சலீம் கான் நடைபயிற்சி சென்றார்.
நடைபயிற்சியின் போது அங்குள்ள ஒரு இருக்கையில் சிறிது நேரம் சலீம் கான் அமர்ந்தார். அந்நேரம் அவர் முன்பு ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. அதில் பின் இருக்கையில் பர்தா அணிந்த பெண் அமர்ந்திருந்தார். அப்பெண் சலீம் கானிடம் லாரன்ஸ் பிஷ்னோயை அனுப்பவா என்று கேட்டு மிரட்டினார். சலீம் கான் பதிலளிப்பதற்குள் அந்த ஸ்கூட்டரில் வந்தவர்கள் யூடர்ன் அடித்து தப்பிச்சென்றுவிட்டனர். ஸ்கூட்டர் நம்பரை மட்டும் சலீம் கான் பார்த்து இது குறித்து போலீஸில் புகார் செய்தார்.
உடனே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் மிரட்டல் விடுத்த ஸ்கூட்டரை ஓட்டிய நபர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டார். இன்று காலையில் அப்பெண் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் விசாரித்த போது இருவரும் காதலர்கள் என்று தெரிய வந்தது. தனது காதலியை கவருவதற்காக இது போன்ற காரியத்தில் ஈடுபட்டதாக அந்த நபர் தெரிவித்தார். இதற்கு முன்பும் இதே போன்று சலீம் கானுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் சல்மான் கான் தந்தை சலீம் கான் மும்பை பாந்த்ராவில் வாக்கிங் சென்ற போது கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பப்பட்டது. இம்மிரட்டல் கடிதத்தை சலீம் கான் வாக்கிங் செய்துவிட்டு வழக்கமாக அமரும் இருக்கையில் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் வைத்துவிட்டுச் சென்றனர்.