பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த மாதம் 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், மருத்துவர்களின் பொதுக்குழு கூட்டத்தின்போது, அதில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்படி, பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை விவகாரத்தில் குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும். அவர்களுக்கு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் வகையிலான தண்டனை வழங்கப்பட வேண்டும். கொல்கத்தா காவல் ஆணையாளர் கோயல், அவருடைய பதவியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் உள்ளிட்டவை தீர்மானங்களில் கூறப்பட்டு இருந்தன.

இதேபோன்று, சுகாதார துறையின் முதன்மை செயலாளர் நாராயண் ஸ்வரூப் நிகாம் மற்றும் அவருடைய 2 உதவி அலுவலர்கள் ஆகியோர் பதவி விலக வேண்டும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான சுற்றுச்சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் முன் வைத்தனர்.

ஆனால் அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறாத சூழலில் டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், மேற்கு வங்காள இளநிலை டாக்டர்கள் அமைப்பு மற்றும் பயிற்சி டாக்டர்களின் கூட்டமைப்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்போது, கொல்கத்தா காவல் ஆணையாளர் வினீத் கோயல் மற்றும் மம்தா பானர்ஜி அரசில் உள்ள சுகாதார மற்றும் குடும்பநல துறையில் உள்ள அனைத்து மூத்த அதிகாரிகளையும் நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. 5 தீர்மானங்களையும் முக்கிய கோரிக்கைகளாக அவர்கள் குறிப்பிட்டனர்.

பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் படுகொலை விவகாரத்தில் சமீபத்தில் சந்தீப்பை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. அதனால், இந்த குற்ற சம்பவத்தில் அவருக்கு தீவிர தொடர்பு உள்ளது என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டு உள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

அதனால், சம்பவம் நடந்த முதல் நாளில் இருந்து, மருத்துவ அதிகாரிகள் மற்றும் கொல்கத்தா போலீசார் அளவில் ஒரு தீவிர நிர்வாக செயலிழப்பை நாங்கள் பார்க்கிறோம். தொடக்கத்தில் இருந்து அனைத்து ஆவண சான்றுகளையும் அழிப்பதற்கும், உண்மையான குற்றவாளிகளை பாதுகாப்பதற்கான தீவிர நடைமுறை ஆரம்பத்தில் இருந்தே நடந்து வந்துள்ளது என்றும் அவர்கள் கூறினர்.

இளநிலை டாக்டர்கள் மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் முறையான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதாரநல மையங்களில் முறையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய அதிகாரிகள், சி.பி.ஐ. மற்றும் சுப்ரீம் கோர்ட்டு ஆகியவை விசாரணை நடைமுறையை விரைந்து மேற்கொண்டு காலதாமதமின்றி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில், கொல்கத்தா நகரில் உள்ள நாக் பஜார் பகுதியில் பா.ஜ.க.வினர் நேற்றிரவு பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பேரணியில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில பொது செயலாளர் அக்னிமித்ரா பால் கூறும்போது, போராடும் டாக்டர்களின் கோரிக்கையின்படி, காவல் ஆணையாளரை வெளியேற்ற வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக அவருக்கு சிறப்பு அதிரடி படையில் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆனபோதும், பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி கிடைக்கப்பெறவில்லை. குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை பாதுகாப்பதற்காக முதல்-மந்திரி முயற்சித்து வருகிறார். டாக்டர்களின் 5 கோரிக்கைகளில் ஒன்று, காவல் ஆணையாளரை வெளியேற்ற வேண்டும் என்பது. அதற்கு பதிலாக, அவருக்கு சிறப்பு அதிரடி படையில் பதவி வழங்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார். இந்நிலையில், இளநிலை டாக்டர்கள் முன்னணியின் குழுவினர் தலைமை செயலாளரை சந்திப்பதற்காக நபன்னாவுக்கு சென்றுள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.