டோக்கியோ: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று (செப்.18) ஒரே நேரத்தில் பல இடங்களில் வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்த நிலையில், அந்த வாக்கி-டாக்கிகள் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு அல்ல என்று ஜப்பானின் Icom நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜப்பானிய நிறுவனமான ஐகாம் வியாழக்கிழமை (செப். 19) வெளியிட்ட அறிக்கையில், “Icom நிறுவனத்தின் IC-V82 என்ற மாடல் வாக்கி-டாக்கிகள் 2004 முதல் அக்டோபர் 2014 வரை தயாரிக்கப்பட்டவை. இந்த மாடல் வாக்கி-டாக்கிகள் மத்திய கிழக்கு உட்பட உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுதி செய்யப்பட்டன. இந்த கையடக்க வாக்கி-டாக்கியின் உற்பத்தி 10 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், எங்கள் நிறுவனத்திலிருந்து இத்தகைய வாக்கி-டாக்கிகளை நாங்கள் ஏற்றுதி செய்யவில்லை.
அதோடு, இந்த மாடல் வாக்கி-டாக்கிகளை இயக்கத் தேவையான பேட்டரிகளின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், போலி தயாரிப்புகளை வேறுபடுத்துவதற்கான ஹாலோகிராம் சீல் இணைக்கப்படவில்லை. எனவே, இந்த தயாரிப்பு எங்கள் நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியாது.
வெளிநாட்டு சந்தைகளுக்கான தயாரிப்புகள், அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மூலமே பிரத்யேகமாக விற்கப்படுகின்றன. ஜப்பானிய பாதுகாப்பு வர்த்தகக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படியே, ஏற்றுமதி மேற்கொள்ளப்படுகிறது.
எங்கள் அனைத்து வாக்கி-டாக்கிகளும் எங்களின் உற்பத்தி துணை நிறுவனமான Wakayama Icom Inc. இல் கடுமையான நிர்வாக முறையின் கீழ் தயாரிக்கப்படுகின்றன. எனவே, எங்கள் நிறுவன தாயாரிப்புகளைத் தவிர வேறு எந்த நிறுவனத்தின் உதிரிபாகங்களையும் நாங்கள் பயன்படுத்துவதில்லை. அனைத்து வாக்கி-டாக்கிகளும் ஒரே தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்படுகின்றன. நாங்கள் அவற்றை வெளிநாட்டில் தயாரிப்பதில்லை” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினரின் கோட்டையாக இருக்கும் லெபனானில் நேற்று (செப். 18) ஒரே நேரத்தில் வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் இறந்தனர் என்றும் 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
லெபனானில் நேற்று முன்தினம் பேஜர்கள் வெடித்தச் சம்பவத்தை தொடர்ந்து நேற்று அதே பாணியில் வாக்கி-டாக்கிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வெடித்துச் சிதறி அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வாக்கி-டாக்கிகள் அனைத்துமே ஈரான் ஆதரவு கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தியது எனக் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் பல இடங்களில் வாக்கி-டாக்கிகள் வெடித்த நிலையில் அவற்றில் ஒன்று முந்தைய நாள் பேஜர் தாக்குதலில் உயிரிழந்த ஹிஸ்புல்லா இயக்கத்தைச் சேர்ந்தவரின் இறுதிச் சடங்கு நிகழ்வின் போது வெடித்தது கவனிக்கத்தக்கது.
பேஜர், வாக்கி-டாக்கி என அடுத்தடுத்து தாக்குதல்கள் நடக்க இஸ்ரேல் தான் காரணம் இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என லெபனான் கூறி வரும் நிலையில் இது குறித்து இஸ்ரேல் மவுனம் சாதித்து வருகிறது.