பெய்ரூட்: லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய 5 ஆயிரம் பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 4 ஆயிரம் பேர் இதில்காயமடைந்துள்ளனர். இந்தச் சதிச்செயலில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் சதி இருப்பது தற்போது தெரியவந் துள்ளது.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில்செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக இஸ்ரேல் போர் நடவடிக்கையை தொடங்கி தீவிரப்படுத்தி உள்ளது. இந்த போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், ஈரானின் கோரிக்கையை இஸ்ரேல் ஏற்கவில்லை.
இதைத் தொடர்ந்து இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து வரும் லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சி அமைப்பு மூலம் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அமைந்துள்ள அல்-ஷஹ்ரா மருத்துவமனையில் பலரது பாக்கெட்டுகளில் இருந்த கையடக்க பேஜர்கள் ஒரே நேரத்தில் திடீரென வெடித்துள்ளன. இதனைத் தொடர்ந்து நகரின் பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துள்ளன. நகரின் முக்கியசாலைகள், மார்க்கெட்கள், மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் வெடித்தன. இதனால் தலைநகர் பெய்ரூட்டில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் சம்பவ இடங்களுக்கு வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனை யில் அனுமதித்தனர். சுமார் 5 ஆயிரம் கையடக்க பேஜர்கள் வெடித்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவை அனைத்துமே, ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தி வந்த பேஜர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பேஜர்கள் வெடித்துச் சிதறியதில் 12 பேர் உயிரிழந்தனர். சுமார் 4 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இதில் 400 பேர் கவலைக்கிடமாகஉ ள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்நிலையில் விசாரணையில் இதில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் இந்த சதிச் செயலில்ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஹிஸ்புல்லா ஆர்டர் கொடுத்து தைவானில் தயாராகி இறக்குமதிசெய்யப்பட்ட 5,000 பேஜர்களுக்குள் சிறிய அளவிலான வெடிபொருட்களை (3 கிராம் எடையுள்ள வெடிபொருள்) வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தைவானை தளமாகக் கொண்ட கோல்ட் அப்பல்லோ நிறுவனம் தயாரித்த 5,000 பேஜர்களை, மொத்தமாகலெபனான் தரப்பு ஆர்டர் செய்துள்ளது. இந்த புதிய பேஜர்களின் உட்பகுதியில் 3 கிராம் எடையுள்ள வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
விரைவில் பதிலடி: இந்த தாக்குதலால் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்றும், இதற்கான பதிலடியை இஸ்ரேல் விரைவில் உறுதியாக பெறும் என்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.
நடந்தது எப்படி? – பேஜரில் இஸ்ரேலின் மொசாட் அமைப்பினர் வெடிக்கும் போர்ட் என்ற சாதனத்தை பொருத்தியுள்ளனர். அதில், 3 கிராம் அளவுக்கு வெடிமருந்தை நிரப்பியுள்ளனர். பேஜர்கள் உற்பத்தி செய்யப்பட்ட இடத்திலேயே இந்த வெடிமருந்து நிரப்பப்பட்டுள்ளது. பேஜரில் கடவுச்சொல் (பாஸ்வேர்ட் அல்லது கோட்) வந்தவுடன் வெடிக்கும் வகையிலான சாதனமாகும் இது. 5 ஆயிரம் பேஜர்களில் இந்த சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. அதன்படி, நேற்றுமுன்தினம் மாலை 3.15 மணிக்கு குறிப்பிட்ட கடவுச்சொல் பேஜரின் திரையில் வந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக சூடான பேஜர்கள் அடுத்த சில வினாடிகளில் வெடித்து சிதறியுள்ளன.
சிரியாவிலும்.. பெய்ரூட்டில் மட்டுமல்லாது, அந்நாட்டுக்கு வெளியே சிரியாவில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஆயுத கும்பலைச் சேர்ந்தவர்கள் வைத்திருந்த பேஜர்களும் வெடித்து சிதறியுள்ளன. இதில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த பேஜர் வெடிப்பின் காரணமாக ஈரான் நாட்டுக்கான லெபனான் தூதர் முஜிதாபா அமானி என்பவர் காயமடைந்துள்ளதாகவும், லெபனான் நாடாளுமன்றத்தின் ஹிஸ்புல்லா பிரதிநிதியான அலி அமாவின் மகன் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
செல்போனுக்கு பதிலாக பேஜர்: ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர் அமைப்பின் தகவல் பரிமாற்றம் சாதனங்கள் பற்றிய விவரத்தை இஸ்ரேல் நன்கு அறிந்து வைத்துள்ளது. இதனால்தான் ஹிஸ்புல்லா அமைப்பினர் பேஜர்களை மட்டுமே பயன்படுத்தி தகவல்களை பரிமாறி வந்தனர். இந்த வகை பேஜர்கள் செய்திகளைப் பெறுவதற்கு மட்டுமே பயன்படும். செல்போன்கள் மூலம் தகவல்களைப் பரிமாறினால் இஸ்ரேல் எளிதில் உளவு பார்த்து தகவல்களை இடைமறி்த்துப் பெறலாம் என்பதால் ஹிஸ்புல்லா அமைப்பினர் பேஜர் பயன்படுத்தி வந்தனர். ஆனால் அவர்களது வழியிலேயே சென்று அவர்கள் பயன்படுத்திய பேஜர்களிலேயே வெடிபொருட்களை நிரப்பி வெடிக்கச் செய்துள்ளனர்.
வாக்கி டாக்கிகள் வெடித்து 3 பேர் உயிரிழப்பு: லெபனானின் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் பேஜர்கள் வெடித்ததில் உயிரிழந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று நகரின்2 இடங்களில் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்திய வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். பெய்ரூட் புறநகர்ப்பகுதியின் 2 இடங்களில் இந்த வாக்கி-டாக்கி வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்திய பேஜர்கள் வெடித்தது போலவே இந்த வாக்கி-டாக்கிகளும் வெடித்துள்ளன. வாக்கி-டாக்கி வெடித்ததில் 3 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த 12 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் காரணமாக டெல் அவிவ், டெஹ்ரான், பெய்ரூட் உள்ளிட்ட மத்திய கிழக்கு நகரங்களுக்கான விமானச் சேவைகளை லுப்தான்ஸா, ஏர் பிரான்ஸ் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.
பேஜர் மாடல் என்ன….? தாக்குதலுக்குள்ளான பேஜர்கள் எந்தவிதமான மாடல்கள் என்பதை லெபனான் ராணுவத்தினர் கண்டறிந்துள்ளனர். இவை ஏபி924 வகையைச் சேர்ந்தவை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இஸ்ரேல் மவுனம்: இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் அரசு, இஸ்ரேல் ராணுவம், இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை சார்பில் இருந்து இதுவரை எந்தவித விளக்கமும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக இஸ்ரேல் மவுனமாக இருப்பது ஏன் என்று அரசியல் நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜேம்ஸ்பாண்ட் படத்தை மிஞ்சும் சதி: பொதுவாக ஜேம்ஸ்பாண்ட் வகை படங்களில்தான் இதுபோன்ற சதிச் செயல்கள் அரங்கேறும். ஆனால் லெபனானில் நடந்த இந்தச் சம்பவம் ஜேம்ஸ்பாண்ட் வகை படங்களையும் மிஞ்சுவதாக அமைந்துள்ளது. இந்நிகழ்வு லெபனான் மட்டுமின்றி உலக நாடுகளையே அதிரச்செய்துள்ளது.