பாலஸ்தீனத்தில் அரேபியர்கள் பெரும்பான்மையாகவும், யூதர்கள் சிறுபான்மையினராவாகவும் உள்ளனர். முதல் உலகப்போருக்கு பிறகு பிரிட்டன் கட்டுப்பாட்டில் கீழ் பாலஸ்தீனம் வந்தது. இங்குள்ள ஜெருசலேம் பகுதியானது யூத, கிறித்துவ மற்றும் இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமானது. இங்கு ஹிட்லர் ஆட்சி காலத்தில் யூதர்களின் குடியேற்றம் அதிகரித்தது. இதற்கு அரேபியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். சில காலத்திலேயே இரு தரப்புக்கும் இடையில் வன்முறை வெடித்து கிளம்பியது.
இஸ்ரேல் எனும் தனி நாடு..
இந்த சூழலில்தான் 1947-ம் ஆண்டு பாலஸ்தீனத்தை விட்டு பிரிட்டன் வெளியேற முடிவு செய்தது. அப்போது பாலத்தீனத்தை இரண்டாக பிரித்து யூதர்களுக்கு ஒரு நாடும், பாலஸ்தீன அரபிகளுக்கு ஒரு நாடும் தோற்றுவிக்க திட்டமிடப்பட்டது. ஜெருசலேத்தை சர்வதேச நகரமாக மாற்றவும் வியூகம் வகுக்கப்பட்டது. இதற்கு அரேபியர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பிறகு 1948-ம் ஆண்டு இஸ்ரேல் எனும் தனி நாடு தோற்றுவிக்கப்பட்டதாக யூத தலைவர்கள் அறிவித்தனர். இதை அமெரிக்கா அங்கீகரித்தது.
ஆனால் பாலத்தீனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஏற்பட்ட போரில் லட்சக்கணக்கான அரேபியர்கள் நாட்டை விட்டு ஓடும் சூழல் உருவானது. அவ்வாறு சென்றவர்கள் காஸா, மேற்கு கரை, ஜோர்டான், சிரியா, லெபனானில் வாழ்கின்றனர். இந்த சூழலில் மொத்த ஜெருசலேமையும் தனது தலைநகர் என இஸ்ரேல் கூறுகிறது. பாலஸ்தீனம் கிழக்கு ஜெருசலேமை தனது எதிர்கால பாலத்தீன நாட்டின் தலைநகர் என கூறுகிறது.
ஹமாஸ் தோற்றம்
1987-ம் ஆண்டு வாக்கில் பாலஸ்தீன பகுதியில் ஹமாஸ் எனும் இஸ்லாமிய கிளர்ச்சி இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இது இஸ்ரேலை அழித்துவிட்டு அங்கு இஸ்லாமிய அரசை நிறுவுவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த சூழலில்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2017-ம் ஆண்டு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார். இதற்கு ஐநாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இஸ்ரேல், கடந்த 50 ஆண்டுகளில் மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் பல குடியிருப்புகளை கட்டியது. இதனால் இரு தரப்புக்கும் இடையில் மோதல் மீண்டும் மோதல் வெடித்தது. குறிப்பாக ஹமாஸ் குழுவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் மூண்டது.
பேஜர்கள் வெடிப்பு
இதையடுத்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியது. இந்த அமைப்பு லெபனான் நாட்டை சேர்ந்தது. இதில் ஷியா முஸ்லீம்கள் அங்கம் வகிக்கிறார்கள். இதில் கடுப்பான இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீதும் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த அமைப்பின் மூத்த தலைவர் ஃபவத் ஷுக்ர் உயிரிழந்தார். இதையடுத்து போர் உக்கிரமானது.
இந்த சூழலில்தான் லெபனான் தலைநகர் பெய்ரூட் உள்பட நாட்டின் பல பகுதிகளில் பேஜர்கள் வெடிக்கத் தொடங்கின. மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து பேஜர்கள் வெடித்ததால் பலர் படுகாயம் அடைத்தார்கள். மேலும் 12 பேர் உயிரிழந்தார்கள். காயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் குவிந்ததால் பெரும் பதற்றம் நிலவியது. நாட்டில் என்ன நடக்கிறது என தெரியாமல் தவித்தார்கள்.
தொழில்நுட்ப வல்லுநர்கள் சொல்வதென்ன?
இதுகுறித்து பேசியிருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள், “பேஜரில் இருக்கும் பேட்டரிகளை ஹேக் செய்து சூடாக்கி வெடிக்க செய்திருக்கிறார்கள். பேஜர்கள் தயாரிக்கும் போதே இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். இதற்கு பின்னால் இஸ்ரேல் இருக்கக்கூடும். அவர்களின் உளவு அமைப்பு வலுவானது என மீண்டும் நிரூபித்துள்ளார்கள். ஹிஸ்புல்லாவின் தகவல் தொடர்பில் இஸ்ரேல் எவ்வளவு ஆழமாக ஊடுருவியிருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்” என்கிறார்கள்.
மேலும் சிலரோ, ” ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு வந்த பேஜர்களை முன்கூட்டியே இஸ்ரேலிய உளவு அமைப்பு கைப்பற்றி விட்டது. பிறகு அதற்குள் வெடிபொருளை வைத்திருக்கிறார்கள். மெசேஜ் வந்தால் வெடிக்கும் வகையில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். பின்னர் அந்த பேஜர் பார்சல்கள் ஹிஸ்புல்லாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வெடிபொருள் இருப்பது தெரியாமலேயே பயன்படுத்தியுள்ளனர். ஏற்கெனவே திட்டமிட்டது போல மெசேஜ் அனுப்பி அவற்றை இஸ்ரேல் வெடிக்க செய்துவிட்டது” என்கிறார்கள்.
`இஸ்ரேல்தான் முழுப் பொறுப்பு’ – லெபனான்
இதுகுறித்து லெபனானின் பிரதமர் நஜிப் மிகாட்டி, “நாட்டின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல். அனைத்து தரநிலைகளின் படியும் இது ஒரு குற்றம்” என தெரிவித்துள்ளது. இதேபோல் ஹிஸ்புல்லா அமைப்பு, “பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த குற்றச் சம்பவத்துக்கு இஸ்ரேல்தான் முழுப் பொறுப்பு. இந்த துரோகச் சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் நிச்சயம் கடுமையான தண்டனையைப் பெறுவார்” என தெரிவித்துள்ளது.
சர்வதேச ஊடகங்கள் கருத்து…
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள், “ஹிஸ்புல்லா வாங்கிய பேஜர்களில் சிறிய அளவிலான அதிநவீன வெடிமருந்தை பல மாதங்களுக்கு முன்பே இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு வைத்துவிட்டது’ என தெரிவித்துள்ளன. முன்னதாக இஸ்ரேலின் கண்காணிப்பில் இருந்து தப்ப பேஜர்களை ஹிஸ்புல்லா பயன்படுத்தி வருகிறது.
1996-ம் ஆண்டு ஹமாஸ் வெடிகுண்டு நிபுணரான யாஹியா அய்யாஷை இஸ்ரேல் மொபைல் போன் மூலம் படுகொலை செய்தது. அவரது செல்பேசி அவரது இருக்கும் போதே வெடித்து சிதறியது. எனவேதான் பேஜர்களை ஹிஸ்புல்லா பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு பேஜர்கள் வெடிப்பு நடந்த அடுத்த நாளே வாக்கி டாக்கி வெடிப்புகள் நடந்தன. இதில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், “இது மிகத் தீவிரமான விஜயமாக பார்க்கிறோம். உடனே இதுபோன்ற தாக்குதல்களை நடத்திவிட முடியாது.
இந்தச் சாதனங்கள் அனைத்தையும் வெடிக்கச் செய்ய ஒரு பெரிய திட்டமிடப்பட்ட ராணுவ நடவடிக்கை முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்” என்றார்.
ஐ.நா தீர்மானம்: ஆதரவளித்த நாடுகள்..
இந்தசூழலில் ஹிஸ்புல்லாவின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவரான ஹசன் நஸ்ரல்லா விரைவில் உரை நிகழ்த்தவுள்ளார். அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் இருதரப்புக்கும் இடையிலான மோதல் மீண்டும் பெரிய அளவில் வெடிக்கும் என்கிறார்கள் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.
முன்னதாக சர்வதேச சட்டத்திற்கு எதிராக மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காஸா பகுதியை இஸ்ரேல் ஆக்கிரத்துள்ளது என்று ஐ.நா-வின் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அதன் அடிப்படையில், ‘ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பகுதிகளில் சட்டவிரோதமாக இருப்பதை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்’ என பாலத்தீனத்தால் தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொது சபைக்கு கொண்டுவரப்பட்டது.
இதற்கு ஆதரவாக 124 உறுப்பினர்களும், எதிராக 14 உறுப்பினர்களும் வாக்களித்தன. மேலும் இஸ்ரேல் உள்பட 43 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன. இதையடுத்து இன்னும் 12 மாதங்களுக்குள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேல் இருப்பதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்கிற பாலஸ்தீனத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு பாலஸ்தீனம், “இது வரலாற்று சிறப்பு வாய்ந்த தருணம். இஸ்ரேல் ஆக்கிரமிப்புகளில் இருந்து வெளியேற வேண்டும். அதன் குற்றங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்கு ஆதரவாக ஐ.நா உறுப்பு நாடுகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் இருப்பது உலகளாவிய ஒருமித்த கருத்தை பிரதிபலிக்கிறது” என தெரிவித்துள்ளது.
ஆனால் இஸ்ரேல், “இது ஒரு ராஜ்ய பயங்கரவாதம். இது பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதுடன் அமைதியை சீர்குலைக்க வழிவகை செய்யும்” என தெரிவித்துள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையிலான பிரச்னை தற்போது முடிவுக்கு வராது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.