ஸ்ரீநகர்ஜம்மு காஷ்மீர் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் ஜனநாயகத்தை காஷ்மீர் வலுவாக்கி வருகிறது என்று 2-ம் கட்ட பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் முதல்கட்ட தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற நிலையில், 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஸ்ரீநகர்,கத்ரா பகுதிகளில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவர் பேசியதாவது: “காஷ்மீர் முதல் கட்ட தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி புதியவரலாறு படைக்கப்பட்டுள்ளது. கிஷ்துவாரில் அதிகபட்சமாக 80 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாட்டின் ஜனநாயகத்தை காஷ்மீர்வலுவாக்கி வருகிறது. இதை ஒட்டுமொத்த உலகமும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அடுத்தகட்ட தேர்தல்களிலும் வாக்குப்பதிவில் காஷ்மீர் மக்கள் புதிய சாதனை படைக்க வேண்டும்.
தேசிய மாநாட்டு கட்சி, மக்கள்ஜனநாயக கட்சி, காங்கிரஸ் ஆகிய3 கட்சிகளை சேர்ந்த 3 குடும்பங்களால்தான் காஷ்மீரின் வளர்ச்சி அழிக்கப்பட்டது. அவர்களது சதியால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிக்கப்பட்டது. கல்வி நிலையங்கள் எரிக்கப்பட்டன. மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தினர். 370 சட்டப்பிரிவை தவறாக பயன்படுத்தினர். அந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, காஷ்மீர் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. எந்த ஒரு சக்தியாலும் 370 சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது. கடந்த காலங்களில் காஷ்மீரில் வன்முறை, கடையடைப்பு அன்றாடநிகழ்வாக இருந்தது. 35 ஆண்டுகளில்3,000 நாட்கள், அதாவது சுமார் 8 ஆண்டுகள் காஷ்மீர் முடக்கப்பட்டது.
10 ஆண்டுகளில் மாற்றம்: ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் முழுமையாக மாறிஉள்ளது. வன்முறை, கடையடைப்பு, ஊரடங்கு காலாவதியாகிவிட்டன. காஷ்மீர் இளைஞர்கள் கல்வீச்சை கைவிட்டு, புத்தகம், பேனா, லேப்டாப்களை சுமக்கின்றனர். 250 பள்ளிகள்பிஎம்ஸ்ரீ பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. புதிய பள்ளி, கல்லூரிகள், பாலிடெக்னிக் கட்டப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு பெருகி வருகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரயில்சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால், ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாடு முழுவதும் குறைந்த கட்டணத்தில் கொண்டு செல்ல முடிகிறது. காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும். இதை பாஜகவால் மட்டுமே நிறைவேற்ற முடியும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவர் ஒமர் அப்துல்லா பிரச்சாரம் செய்தார். அவர் கூறும்போது, “காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ்சின்ஹா தன்னிச்சையாக சட்டங்களை அமல்படுத்தி வருகிறார். நடந்துவரும் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாடு, காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதன்பிறகு, ஆளுநரால் தன்னிச்சையாக சட்டம் இயற்ற முடியாது’’ என்றார். மக்கள் ஜனநாயக கட்சி தலைவர்மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி கூறும்போது, “தேசிய மாநாட்டு கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதுகுறித்து தேர்தல்ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். முதல்கட்ட வாக்குப்பதிவு திருப்தி அளிக்கிறது’’ என்றார்.
காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில் 61 சதவீத வாக்குப்பதிவு: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில்61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. கிஷ்துவார் மாவட்டத்தில் அதிகபட்சமாக 80.14 சதவீத வாக்குகள் பதிவாகின. அடுத்ததாக, தோடா மாவட்டத்தில் 71.34 சதவீதம், செனாப் பள்ளத்தாக்கில் உள்ள ராம்பன் மாவட்டத்தில் 70.55 சதவீதம் வாக்குப்பதிவு நடந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2-ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்.25-ம் தேதியும், 3-ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்.1-ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்.4-ம் தேதி நடைபெற உள்ளது.