சென்னை: சென்னை வேளச்சேரி ஏரியில் சென்னை குடிநீர் வாரியம் தொடர்ந்து கழிவுநீர் விட்டு வருவதாகவும், கழிவுநீர் கலப்பதை அடைத்துவிட்டதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அரசு பொய்யான அறிக்கை தாக்கல் செய்திருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் விடப்படுவதால் ஏரி மாசுபடுவதாக நாளிதழில் வந்த செய்தி அடிப்படையில் வழக்காக எடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தார். அதில், தலைமைச் செயலர் தலைமையில் வேளச்சேரி ஏரியை சீரமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் ஏரியில் 4 இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுத்துவிட்டதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்ததாகவும் இடம்பெற்றிருந்தது.
இது தொடர்பான செய்தி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த செப்.15-ம் தேதி வெளியானது. இதை படித்த வேளச்சேரியை சேர்ந்த வாசகர் ஒருவர், “வேளச்சேரி ஏரியில் சென்னை குடிநீர் வாரியமே நேரடியாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை விட்டு வருகிறது. குறிப்பாக அடையார் மண்டலம், 177-வது வார்டு, வேளச்சேரி 100 அடி புறவழிச்சாலை அருகில், திரவுபதி அம்மன் கோயில், 5-வது தெரு பின்புறத்தில் இன்றும் (செப்.19) ஏரியில் கழிவுநீர் தொடர்ந்து கலக்கப்பட்டு வருகிறது. கழிவுநீர் கலக்கும் அனைத்து இடங்களையும் குடிநீர் வாரியம் அடைக்கவில்லை.
பசுமை தீர்ப்பாயத்தில் அரசு பொய்யான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது” என்று புகார் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர். இந்நிலையில் வேளச்சேரி ஏரி கழிவுநீரால் மாசுபடுவது தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நாளை (செப்.20) விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.