Ind Vs Ban : '9 நிமிடங்களில் வெளியேறிய கோலி; தடுமாறிய ரோஹித்’ – செக் வைத்த சேப்பாக்கம் பிட்ச்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸை வங்கதேசம் வென்று இந்திய அணியை பேட் செய்ய வைத்தது. முதல் செஷனிலேயே இந்திய அணியின் முக்கியமான சில விக்கெட்டுகள் வீழ இந்திய அணி கொஞ்சம் தடுமாறி வருகிறது.

Ind Vs Ban

சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் வழக்கமாக ஸ்பின்னர்களுக்குதான் அதிக சாதகமான அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும். ஆனால், இன்றைக்கு இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் ஒரு சர்ப்ரைஸ் இருந்தது. அஸ்வினையும் ஜடேஜாவையும் மட்டும் ஸ்பின்னர்களாக லெவனில் வைத்துவிட்டு குல்தீபை பெஞ்சில் வைத்திருந்தார்கள். பும்ரா, சிராஜ் ஆகியோருடன் மூன்றாவதாக ஆகாஷ்தீப் சிங்கையும் வேகப்பந்து வீச்சாளராக லெவனுக்குள் வைத்திருந்தனர். இதனால் இந்த பிட்ச் வழக்கத்தை விட ஸ்பின்னுக்கு கொஞ்சம் குறைவான சாதகங்களையே உள்ளடக்கியிருக்கும் என தோன்றியது. அதன்படியே முதல் செஷனில் வங்கதேசத்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகச்சிறப்பாக வீசியிருந்தனர். குறிப்பாக, இந்தப் போட்டிக்கு முன்பாக வெறும் 6 இன்னிங்ஸ்களில் மட்டுமே பந்துவீசியிருந்த ஹசன் மஹ்முத் இந்திய வீரர்களை திணறடித்தார்.

முதல் 10 ஓவர்களை கடப்பதற்குள்ளேயே இந்திய அணி ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி என மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ரோஹித் சர்மா ஓப்பனராக களமிறங்கியிருந்தார். டஸ்கின் அஹமதுவும் ஹசனும்தான் முதல் ஸ்பெல்லை வீசியிருந்தனர். ரோஹித் அவர் எதிர்கொண்ட முதல் 10 பந்துகளில் ஏறக்குறைய அத்தனை பந்துகளையும் லீவ்தான் செய்திருந்தார். ரோஹித் பொறுமையாக நின்று ஆட முயற்சிக்கிறார் என தோன்றியது. ஆனால், ரோஹித்தின் லீவ் செய்து ஆடும் விதத்தை ஹசன் சீக்கிரமே உடைத்தார்.

Bangladesh

ஓவர் தி விக்கெட்டில் வந்து ஆங்கிள் இன்னாக மிடில் & லெக் ஸ்டம்ப் லைனில் திரும்பும் பந்துகளை வீசினார். இதே பாணியில் நான்காவது ஸ்டம்ப் லைனில் கொஞ்சமாக வெளியே திரும்பும் பந்துகளையும் வீசினார். தொடர்ச்சியாக லீவ் செய்துகொண்டிருந்த ரோஹித் டைட்டான லைனில் வந்த இந்த பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திணறினார்.

Rohit

ஹசன் வீச அவர் எதிர்கொண்ட 13 வது பந்தை பேடில் வாங்கினார். வங்கதேசம் ரிவியூவ் சென்றது. அம்பயர்ஸ் காலில் ரோஹித் தப்பித்தார். ஆனாலும் ரோஹித் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஹசன் வீசிய ஓவரிலேயே ரோஹித் எதிர்கொண்ட 19 வது பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார். நான்காவது ஸ்டம்ப் லைனில் வெளியே திரும்பிய இந்த பந்தில் எட்ஜ் ஆகி செகண்ட் ஸ்லிப்பில் நின்ற சாண்டோவிடம் கேட்ச் ஆகி 6 ரன்களில் வெளியேறினார். 27 நிமிடங்களுக்கு மட்டுமே ரோஹித் களத்தில் நின்றிருந்தார்.

நம்பர் 3 இல் சுப்மன் கில் களமிறங்கினார். சுப்மன் கில் 8 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 0 ரன்னில் 11 நிமிடங்களிலேயே பெவிலியனுக்கு திரும்பினார். லெக் சைடில் எகிறி செல்லும் பந்துகளையே இவருக்கான திட்டமாக ஹசன் முன்னெடுத்தார். லெக் ஸ்டம்பை குறிவைத்து கொஞ்சம் இடுப்புக்கு மேலாக வீசிய ஒரு பந்து வைடாக சென்று பவுண்டரியாகிவிடும். அடுத்த பந்தை கொஞ்சம் கட்டுப்பாட்டோடு வீச சில் பேடில் வாங்குவார். வங்கதேசத்தினர் அப்பீல் செய்தனர். ஆனாலும் ரிவியூவ் சென்றிருக்கமாட்டார்கள். அடுத்த பந்தை இன்னும் கொஞ்சம் கட்டுப்பாடோடு நினைத்த மாதிரியே குட் லெந்தில் லெக் சைடில் வீசியிருந்தார். இதை தடுத்து ஆட முயன்று எட்ஜ் ஆகி கில் கீப்பரான லிட்டன் தாஸிடம் கேட்ச் ஆனார்.

Virat Kohli

அதிக எதிர்பார்ப்புடன் விராட் கோலி களமிறங்கினார். 8 மாதங்களுக்கு பிறகு விராட் கோலி ஆடும் டெஸ்ட் போட்டி இது. விராட் ரோஹித்தை போல நின்று ஆடவெல்லாம் விருப்பப்பட்டதாக தெரியவில்லை. வந்த வேகத்திலேயே ஷாட்கள் ஆடி ரன் சேர்க்க ஆரம்பித்தார். இந்த வேகத்தை ஹசன் பயன்படுத்திக் கொண்டார்.

நான்காவது ஸ்டம்ப் லைனில் கொஞ்சம் ஃபுல்லாக அவர் வீசிய பந்துக்கு பேட்டை விட்டு எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆனார் கோலி. பெரிய இன்னிங்ஸை ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டவர் வெறும் 6 ரன்களில் ஒன்பதே நிமிடங்களில் களத்திலிருந்து வெளியேறினார்.

இந்திய அணி 34-3 என தடுமாறியது. இந்த சமயத்தில் கே.எல்.ராகுலுக்கு முன்பாக ரிஷப் பண்டை மேலே ஏற்றி அனுப்பிவிட்டார்கள். கொஞ்சம் அட்டாக்காக ஆடி வங்கதேசத்தின் ஆதிக்கத்தை பண்ட் குறைப்பார் என நினைத்திருக்கலாம். ஜெய்ஸ்வால் – பண்ட் என இருவருமே நன்றாக கூட்டணி அமைத்தனர். அவசரப்படாமல் பொறுமையாக நின்று ஆடினர். ஏதுவாக வந்த பந்துகளுக்கு மட்டுமே பேட்டை விட்டு ஆடினர். இவர்களின் கூட்டணி அரைசதத்தை கடந்தது. உணவு இடைவேளையின் போது இந்திய அணி 88-3 என்ற நிலையில் இருந்தது.

Pant

வங்கதேசம் இந்த செஷனை தனதாக்கியிருக்கிறது. இந்திய அணி மீண்டெழ முயற்சி செய்து வருகிறது. என்ன நடக்கப்போகிறதென பொறுத்திருந்து பார்ப்போம்.

விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.