NPS Vatsalya: குழந்தைகளின் ஓய்வுக்காலத்திற்கு ஏற்றது.. யார் முதலீடு செய்யலாம்… விதிமுறைகள் என்ன?

‘குழந்தைகளுக்கு எதாவது சேர்த்து வெச்சுடனும்பா’ என்பது அனைத்து பெற்றோர்களின் ஆசை. இந்த ஆசை நிறைவேறும் விதமாக, கொஞ்சம் நஞ்சமல்ல… கோடிக்கணக்கில் குழந்தைகளுக்கு சேர்க்கலாம், ‘என்.பி.எஸ் வாத்சல்யா’ திட்டம் மூலம்.

கடந்த ஜூலை மாதம் தாக்கலான 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் புதிய ஓய்வூதிய திட்டம் என்.பி.எஸ் வாத்சல்யா” என்று பேசினார். இதனையடுத்து, இந்தத் திட்டம் நேற்று நிர்மலா சீதாராமனால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

என்.பி.எஸ் வத்சல்யா என்றால் என்ன?

2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட என்.பி.ஸ் திட்டத்தின் ஒரு அங்கம் ‘என்.பி.எஸ் வத்சல்யா’ திட்டம். ஆரம்பத்தில், என்.பி.எஸ் திட்டம் அரசு ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அது அனைத்து இந்தியர்களுக்குமானதாக மாற்றப்பட்டது. இப்போது இந்தத் திட்டம் ‘என்.பி.எஸ் வாத்சல்யா’ மூலம் குழந்தைகளுக்குமானதாக விரிகிறது.

ஒருவரின் ஓய்வுகாலத்திற்காக இப்போதிருந்தே சேமிக்கும் திட்டம் என்.பி.எஸ் திட்டம். இதுவே குழந்தைகளின் ஓய்வுக்காலத்திற்கு சேமிக்கும் திட்டம் என்.பி.எஸ் வாத்சல்யா திட்டம்.

விதிமுறைகள் என்ன?

  • என்.பி.எஸ் வாத்சல்யா திட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 18 வயதானவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் கணக்கு தொடங்கலாம்.

  • இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகை ரூ.1000 முதல் முதலீடு செய்யலாம்.

  • குழந்தைகளின் பெற்றொர் அல்லது பாதுகாவலர் கணக்கை தொடங்கி முதலீடு செய்யலாம்.

  • இந்தத் திட்டத்தின் கணக்கை வங்கிகள், தபால் அலுவலகங்கள், ஓய்வூதிய நிதியங்கள் மற்றும் ஆன்லைனில் இ-என்.பி.எஸில் கூட தொடங்கலாம்.

  • Default சாய்ஸ், ஆட்டோ சாய்ஸ், ஆக்டிவ் சாய்ஸ் – இதில் ஒரு முதலீட்டை சாய்ஸை தேர்ந்தெடுக்க வேண்டும்.

NPS Vatsalya: என்னென்ன ஆவணங்கள் தேவை?

என்னென்ன ஆவணங்கள் தேவை?

குழந்தையின் பிறந்த தேதியின் ஆதார சான்றிதழ் (பிறப்பு சான்றிதழ், பான் கார்டு, பாஸ்போர்ட்).

பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அடையாளம் மற்றும் முகவரி சான்றிதழ்.

ஒருவேளை குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் வெளிநாடு வாழ் இந்தியராக இருந்தால், என்.ஆர்.இ அல்லது என்.ஆர்.ஓ வங்கி கணக்கு.

18 வயதிற்கு மேல்…

குழந்தையின் 18 வயதிற்கு பிறகு, என்.பி.எஸ் வாத்சல்யா கணக்கு, என்.பி.எஸ் கணக்காக மாறிவிடும். அதன் பின்னர், அந்தக் குழந்தையே அந்த கணக்கில் முதலீடு செய்ய தொடங்கலாம். குழந்தை பிறந்தது முதலே இது சேர்க்கப்படுவதால், அந்தக் குழந்தையின் ஓய்வின்போது, இந்தத் தொகை அவர்களுக்கு பெரியளவில் கைக்கொடுக்கும்.

இடையில் காசு எடுக்கலாமா?

குழந்தைக்கு 18 வயது முடிவதற்குள் என்.பி.எஸ் வாத்சல்யா திட்டக் கணக்கிலிருந்து மூன்று முறை காசு எடுக்க முடியும். இப்படி பணம் எடுக்க முதலீடு செய்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். முதலீடு செய்த மொத்த பணத்தையுமே எடுத்துக்கொள்ள முடியாது. முதலீடு செய்ததில் 25 சதவிகிதத் தொகையை மட்டுமே எடுக்க முடியும். மேலும் கல்வி, உடல்நிலை பாதிப்பு, ஊனம் போன்ற காரணங்களுக்காக மட்டுமே காசை எடுக்க முடியும்.

18 வயதிற்கு பிறகு, இந்தத் திட்டத்தை நீட்டிக்க விருப்பம் இல்லாவிட்டால், மொத்த தொகையையும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், மொத்த முதலீட்டு தொகை ரூ.2.5 லட்சத்திற்கு மேல் இருந்தால், 20 சதவிகித தொகையை மொத்தமாகவும், மீதி 80 சதவிகித தொகையை தவணையாகவும் பெறலாம். ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் இருந்தால் மொத்தமாகவே பெற்றுக்கொள்ளலாம்.

NPS Vatsalya: இடையில் காசு எடுக்கலாமா?

ஒருவேளை அசம்பாவிதம் நடந்தால்…

ஒருவேளை இந்தத் திட்டத்தின் போதே, அசம்பாவிதமாக குழந்தை இறந்துவிட்டால், மொத்த தொகையும் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு சென்றுவிடும்.

முதலீடு செய்யும் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ இறந்துவிட்டால், வேறு ஒருவர் பதிவு செய்துவிட்டு முதலீட்டை தொடரலாம்.

எவ்வளவு கிடைக்கும்?

சண்டிகரின் பத்திரிகை தகவல் பணியகத்தின் எக்ஸ் வலைதளப் பக்கப் பதிவின் படி,

என்.பி.எஸ் திட்டத்தில் ஒரு குழந்தையின் பெயரில் 18 ஆண்டுகளுக்கு வருடா வருடம் ரூ.10,000 முதலீடு செய்யப்பட்டால்,

18 ஆண்டுகளுக்கு பிறகு, 10 சதவிகித வருவாய் விகிதம் கிடைத்தால் கையில் ரூ.5 லட்சம் கிடைக்கும்.

60 வயதில் 10 சதவிகித வருவாய் விகிதத்திற்கு(Rate of Return) ரூ.2.75 கோடியும், 11.59 சதவிகித வருவாய் விகிதத்திற்கு ரூ.5.97 கோடியும், 12.86 சதவிகித வருவாய் விகிதத்திற்கு ரூ.11.05 கோடியும் கிடைக்கும்.

யார் முதலீடு செய்யலாம்?

இது பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் என இருவருக்குமான திட்டம் ஆகும். இது முழுக்க முழுக்க ‘ஓய்வுக்கால நிதி திட்டம்’ என்பதைத் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதனால் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற செலவுகளுக்கு முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது சரியான திட்டம் அல்ல.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.