நாட்டின் 4G மற்றும் 5G நெட்வொர்க்குகளை மேம்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடுமையான தரநிலைகளை TRAI உருவாக்கியுள்ளது. ஏர்டெல், பிஎஸ்என்எல், ஜியோ மற்றும் விஐ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவை தரத்தை மேம்படுத்தும் வகையில் அக்டோபர் 1ம் தேதி முதல் புதிய விதி அமல்படுத்தப்படுகிறது. மேலும், வியாபார நோக்கில் செய்யப்படும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு முடிவு கட்டவும் TRAI (Telecom Regulatory Authority of India) நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
புதிய விதிகள் தொடர்பாக, தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அக்டோபர் 1ஆம் தேதிக்குள் தங்கள் இணக்க அறிக்கையை சமர்ப்பிக்க காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த மாதம் ஆகஸ்ட் 21ம் தேதி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் TRAI தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தியது. இக்கூட்டத்தில் இது தொடர்பான கருத்துக்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 27ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது.
எனினும், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இது வரை எந்த விதமான கருத்தையும் தாக்கல் செய்யவில்லை என கூறிய TRAI சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், கருத்துக்களை பதிவு செய்வதற்கான தேதி ஏற்கனவே நீட்டிக்கப்பட்டுவிட்ட நிலையில், TRAI விதிமுறைகளின்படி, டெலிகாம் நிறுவனங்கள் வழங்கு சேவை, நிர்ணயிக்கப்பட்ட அளவுகோலில் பொருந்தாத பட்சத்தில் கடுமையான அபராதம் விதிக்கப்படும். சில கடுமையான சூழ்நிலையில், மொபைல் சேவை முடக்கம் இதில் அடங்கும்.
TRAI வழங்கிய புதிய விதிமுறைகளைத் தொடர்ந்து, வயர்லெஸ் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளின் தரத்தை அளவிட குறிப்பிட்ட வழிமுறை பின்பற்றப்படும். பல பயனர்கள் தொலைத் தொடர்பு சேவையின் தரம் குறித்து கட்டுப்பாட்டாளரிடம் புகார் அளித்துள்ளனர். இவற்றை மேம்படுத்த பொதுவான அளவுரு கொண்டுவரப்படும்.
வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை (QoS) வழங்குவதில் குறைபாடு ஏற்படும் போது, ஆபரேட்டர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தையும் TRAI அதிகரித்துள்ளது. முன்பு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு வகையில் விதிக்கப்படும் பிற அபராதத் தொகையை உயர்த்தவும் TRAI முடிவு செய்துள்ளது. இதில் அபராதத் தொகை ரூ.1 லட்சம், 2 லட்சம், 5 லட்சம், 10 லட்சம் என்ற அளவில் இருக்கும். சேவை தரம் பொருந்தவில்லை என்றால் அல்லது விதிகளை மீறினால் இந்த அபராதம் விதிக்கப்படும்.