தஞ்சாவூர், சீனிவாசபுரம் அருகே உள்ள சேவ்வப்பநாயக்கன் ஏரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா வயது 56. வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவில் போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றினார். இவர் பெரும்பாலும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வார். ராஜா தன் வீட்டில் செல்லப்பிராணியாக நாய் வளர்த்து வந்தார். அவரின் குடும்பத்தினர் அந்த நாய் மீது அதீத பாசம் வைத்திருந்தனர். இந்நிலையில் அந்த வளர்ப்பு நாயை ஆற்றில் குளிப்பாட்ட முடிவு செய்தார் ராஜா. அதன்படி நாயை குளிப்பாட்டுவதற்காக தனது மகன் ராகுல், மகள் லாவண்யாவையும் காரில் அழைத்து கொண்டு சென்றார்.
தஞ்சாவூர் அருகே உள்ள வண்ணாரப்பேட்டை மானோஜிபட்டி பாலம் அருகே கல்லணைக் கால்வாய் ஆற்றுக்குச் சென்றுள்ளார். ஆற்றின் படியில் இறங்கி நாயை குளிக்க வைத்துள்ளார். அது நீச்சல் அடித்ததைப் பார்த்து ராஜா உள்ளிட்டோர் ரசித்துள்ளனர். இந்நிலையில் நாய் ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளது. இதைப் பார்த்த ராகுல், நாயைக் காப்பாற்றுவதற்காகச் சென்றுள்ளார். அப்போது ராகுலும், நாயும் தண்ணீரில் சிக்கியதைப் பார்த்து ராஜா பதறியிருக்கிறார். உடனே தானும் ஆற்றுக்குள் இறங்கி இருவரையும் மீட்க முயன்றுள்ளார்.
கல்லணை கால்வாயில் தண்ணீர் அதிகமாகச் செல்வதால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் மகனையும், நாயையும் மீட்கச் சென்ற ராஜா ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதைப் பார்த்த ராகுல் `அப்பா… அப்பா’ எனக் கத்தியிருக்கிறார். தன் எஜமானர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதைப் பார்த்த நாயும் பரிதவித்துள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் வேகமாக ஆற்றுக்குள் இறங்கி ராகுலையும், நாயையும் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். போலீஸ் எஸ்.ஐ., ராஜா, ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் எங்கும் பரவியது. இதையடுத்து, ராஜாவை தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தேடும் பணியில் ஈடுப்பட்டனர். இதைத் தொடர்ந்து கண்டிதம்பட்டு பகுதியில் உயிரிழந்த நிலையில் ராஜாவின் உடலை மீட்டனர். இது குறித்து கள்ளப்பெரம்பூர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் தஞ்சாவூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.