நாட்டிங்காம்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.
இதன் முதலாவது ஒரு நாள் போட்டி நாட்டிங்காமில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன பிலிப் சால்ட் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து 2-வது விக்கெட்டுக்கு கை கோர்த்த பென் டக்கெட் – வில் ஜாக்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். வில் ஜாக்ஸ் 62 ரன்களில் ஆட்டமிழக்க, சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டக்கெட் 95 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஹாரி புரூக் 39, ஜேமி சுமித் 23 மற்றும் ஜேக்கப் பெத்தேல் 35 ரன்கள் அடிக்க இங்கிலாந்து 300 ரன்களை கடந்தது. இதனிடையே இங்கிலாந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் தாரை வார்த்தது.
முடிவில் 49.4 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த இங்கிலாந்து 315 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக மார்னஸ் லாபுசாக்னே மற்றும் ஆடம் ஜம்பா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் 10 ரன்னிலும், ஸ்மித், கேமரூன் கிரீன் தலா 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதிரடியாக் ஆடிய டிராவிஸ் ஹெட் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவருக்கு லபுசாக்னே ஒத்துழைப்பு கொடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 148 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், ஆஸ்திரேலியா 44 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. டிராவிஸ் ஹெட் 129 பந்தில் 5 சிக்சர், 20 பவுண்டரி உள்பட 154 ரன்னும், லபுசாக்னே 61 பந்தில் 77 ரன்னும் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.