இலங்கையில் நாளை அதிபர் தேர்தல் – வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்

கொழும்பு,

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்த இலங்கை, சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவியுடன் மெல்ல மெல்ல சிக்கலில் இருந்து மீண்டு வருகிறது. சுற்றுலாப்பயணிகள் வருகை உள்ளிட்ட பல காரணங்களால் அந்த நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இலங்கையில் நாளை (சனிக்கிழமை) அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் நடந்து வந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது. கடைசி நாள் பிரசாரத்தில் அதிபர் வேட்பாளர்கள் அனைவரும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதிலும் 11 பொதுக்கூட்டங்கள் பிரமாண்டமாக நடைபெற்றன. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, களம் இறங்கியுள்ளார். இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமாரா திசநாயகே, தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். இவர்கள் 3 பேருக்கும் இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில், வெற்றி யாருக்கு என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். எனினும் அவருக்கு பெரிய அளவில் ஆதரவு காணப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.