மதுரா: உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தின் பிருந்தாவன் பகுதி அருகே நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு நிலக்கரி ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு ரயிலின் 25 பெட்டிகள் தடம் புரண்டன.
இதனால் அந்த ரயில் பாதையில் செல்லக்கூடிய 30 ரயில்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சீரமைப்பு பணியில் நேற்றுமுன்தினம் இரவிலிருந்து 500 பணியாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து ஆக்ரா ரயில்வே கோட்ட மேலாளர் தேஜ்பிரகாஷ் அகர்வால் கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் பிருந்தாவன் பகுதி அருகே நிலக்கரி ஏற்றிக் கொண்டு ராஜஸ்தானில் உள்ள சூரத்கார் மின்சார ஆலைக்கு சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு ரயில் திடீரென விபத்தில் சிக்கியது. ரயிலின் 25 பெட்டிகள்தடம் புரண்டன. இதனால், இந்த வழியில் செல்லகூடியரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாரும் காயமடையவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸார் விசாரணை: விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு ரயில்வே அதிகாரிகள், ரயில் பணியாளர்கள் மற்றும் மாநகரபோலீஸார் விரைந்து சென்றுமீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சீரமைப்புப் பணி குறித்து வடமத்திய ரயில்வே பொது மேலாளர் உபேந்திர சந்திர ஜோஷி நேற்று கூறும்போது, ‘‘ரயில் பாதையின் குறுக்கே விழுந்துள்ள பொருட்களை முதலில் அகற்றுவதில் கவனம் செலுத்துகிறோம். ஏனெனில் நடந்துள்ள விபத்தால் இந்த ரயில் பாதையில் செல்லக்கூடிய 30 ரயில்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை இரவிலிருந்து 500 பணியாளர்கள் முழுவீச்சில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சரக்கு ரயிலை தடம் புரளச் செய்ய சதித்திட்டம் ஏதும் தீட்டப்பட்டதா என்கிறகோணத்திலும் ரயில்வே போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.’’ என்றார்.