2028-ம் ஆண்டு ஐ.நா சபையிலிருந்து விலகி சீனா தலைமையில் சில நாடுகள் ரீபப்ளிக் என்று மற்றொரு கூட்டமைப்பை உருவாக்குகின்றன. மூன்றாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்கும் அந்த நேரத்தில் இந்தியா எந்த அமைப்பிலும் சேராமல் நடுநிலையோடு இருப்பதாகக் காட்டிக்கொள்கிறது.
உலகமே இடிந்து விழும் நிலையிலும் உள்ளூர் அரசியலில் முதலமைச்சரின் (நாசர்) மச்சான் நடராஜ் (நடராஜ்/நட்டி), தன்னை கிங் மேக்கர் என்று சொல்லிக்கொண்டு ஊழல் கேம் ஆடிக்கொண்டிருக்கிறார். ஐ.நா சபையின் ஆயுதப் பயிற்சி சிறப்புப் பிரிவு அதிகாரியாக இருக்கும் தமிழரசன் (ஹிப்ஹாப் ஆதி) அடுத்து கல்வி அமைச்சராகப் போகிற முதல்வரின் மகள் கீர்த்தனாவை (அனகா) வனவிலங்கு தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறார் ஹீரோ. இருவருக்கும் காதல் மலர, கல்வி அமைச்சராகப் பதவி ஏற்கும் கீர்த்தனா, எளியவருக்கும் கல்வியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற திட்டத்தை வெளியிடுகிறார். அதனை எதிர்க்கும் நடராஜ், கமிஷனுக்காக துறைமுகத்தில் முடங்கியிருக்கும் சர்வதேச பொருளை வெளியில் எடுக்கத் தமிழ்நாட்டில் கலவரத்தைத் தூண்டுகிறார். அதில் ஹிப்ஹாப் ஆதி தீவிரவாதி எனக் கைது செய்யப்படுகிறார். நாட்டில் அவசரக்காலம் அறிவிக்கப்பட்ட, அந்தச் சூழலில் ரிபப்ளிக் நாடுகள், இந்தியாவைக் கொடூரமாகத் தாக்குகின்றன. இந்த மூன்றாம் உலகப் போரை உலகின் ‘கடைசி உலகப் போராக’ தமிழரசன் எப்படி மாற்றுகிறார் என்பதே படத்தின் கதை.
மாஸான என்ட்ரி, அதிரடி சண்டைக் காட்சிகள், டெம்ப்ளேட் ஹிப் ஹாப் ஆதியின் முகபாவனைகள் எனத் தமிழரசனாகச் சிறப்பாகவே நடித்திருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி. தானே எழுதி இயக்கியுள்ள படத்தில் தன்னைவிட கிங் மேக்கர் கதாபாத்திரத்துக்கு திரை நேரத்தை அதிகமாக ஒதுக்கியுள்ளது ஆரோக்கியமான விஷயம். அதைச் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ள நட்டியின் பார்வையிலேயே மொத்த கதையும் சொல்லப்படுவது சுவாரஸ்யம் தருகிறது. கறுப்பு, வெள்ளை என்று அப்பட்டமாக இல்லாமல் இருக்கும் க்ரே தன்மையான அந்தப் பாத்திரத்துக்கு ‘நானே சிறந்த சாய்ஸ்’ என்று படத்திற்கும் கிங் மேக்கர் ஆகிறார் நட்டி. விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கும் களத்துக்கு “தமிழ், தமிழ், தமிழ்” என லூப் மோடில் சொல்வதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட நாயகி கதாபாத்திரத்தில் அனகா.
ஹரீஷ் உத்தமன், கல்யாண் மாஸ்டர், முனிஷ்காந்த் எல்லோருக்கும் இருவிதமான கதாபாத்திர வடிவமைப்புகள் இருந்தாலும் அதைச் சிறப்பாகவே கையாண்டிருக்கிறார்கள். ரைசிங் ஸ்டார் ரிஷிகாந்தாக வரும் ஷாரா ஒரு சில இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகிறார். இதுதவிர நாசர், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் ஆகியோரும் வந்து போகிறார்கள். இந்தக் கூட்டத்தில் கிச்சு கிச்சு மூட்டும் புலிப்பாண்டியாக அழகம்பெருமாள் அரங்கம் அதிரச் செய்திருக்கிறார்.
உலகப்போரின் உக்கிரம், வெடித்துச் சிதறும் குண்டுகள், இடியும் கட்டடங்கள், அதற்குள் கதை மாந்தர்களின் சண்டை ஆகியவற்றை பட்ஜெட்டிற்குத் தகுந்த தரமான வரைகலையைக் கொண்டு அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜா. அவரது காட்சி சட்டகத்துக்குப் போர் முகாம்கள், வதை முகாம்கள், ரிபப்ளிக் அமைப்பின் கட்டடங்கள், மறுசீரமைக்கப்பட்ட மெட்ரோ பில்டிங் எனக் கலை இயக்கத்தில் ஆர்.கே.நாகா நம்பத்தனமையைக் கூட்டியிருக்கிறார். பல இடங்களில் மாறி மாறி வருகிற காட்சிகளைப் புரிகிற வண்ணம் சிறப்பாகக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ். மகேஷ் மேத்யூவின் சண்டைக் காட்சிகளின் வடிவமைப்பு, துப்பாக்கி சத்தத்துக்கு ஈக்குவலாக அதிர்வுகளைக் கிளப்பியிருக்கிறது. பின்னணி இசை போல ஒவ்வொரு முக்கிய காட்சிகளிலும் பின்னணி பாடலும் வந்து போவது சற்று தொந்தரவே!
தன் மீது உருவாகியுள்ள டெம்ளேட்டுகளை உடைத்து, உலக அரசியல், இந்திய அரசியல் என வித்தியாசமான முயற்சியில் இறங்கியிருக்கிறார் இயக்குநர், நடிகர் ஹிப்ஹாப் ஆதி. கதைக்கான மையத்தை நெருங்கும் முதல் பாதியின் காட்சிகளிலிருக்கும் வேகம் சிறிது குழப்பத்தை உண்டாக்கினாலும் நம் கவனத்தைச் சிதறவிடாமல் பார்த்துக் கொள்கிறது. குறிப்பாக நட்டியின் நக்கலான பேச்சும், பிரச்னைகளை அணுகும் விதமும் ரசிக்க வைக்கின்றன. ஒரு போரினைக் காட்டவேண்டும், அதற்குப் பின்னான உலகினைக் காட்டவேண்டும் என்கிற பிரமாண்ட டாஸ்கினைக் குறைவான பட்ஜெட்டில் சிறப்பாகச் செயல்படுத்தி இருக்கிறது படக்குழு. அதேபோல சாதி,மதம், இனம், மொழி அனைத்தையும் கடந்து நாம் அனைவரும் மனிதர்கள் என்று மனிதம் பேசிய இடமும் சிறப்பு. படத்தில் பல இடங்களில் நாம் உடனடியாக ஒரு புது உலகுக்குச் செல்லத் தயாராகிறோம். ஆனால் இடையிடையே வரும் காதல் காட்சிகளில் அதற்குத் தேவையான அழுத்தம் மிஸ்ஸிங்.
அரசியல் நையாண்டியாக இலுமினாட்டி தியரியை கலாய்த்ததும், அடிப்படைவாதிகளைக் கோமாளியாக மாற்றியிருப்பதும் சிந்திக்க வைக்கும் ‘கலகல’. காட்சியாக விவரிக்க வேண்டிய பல விஷயங்கள் வாய்ஸ் ஓவரிலேயே நகர்வது மைனஸ். அதுவும் பல முக்கியமான சம்பவங்களைத் தலைப்புச் செய்திகள் வாசிப்பதைப் போன்று கடந்துபோயிருப்பது அக்காட்சிகளுக்குத் தேவையான ஆழத்தைத் தராமல் போயிருக்கிறது. நட்டி நடிப்பைத் தாண்டி வாய்ஸ் ஓவரிலும் டபுள் டியூட்டி பார்த்திருக்கிறார். சினிமா என்பது காட்சி ஊடகம் என்பதால் இதனைச் சற்றே குறைத்திருக்கலாம். மேலும் போரின் வலியின் உணர்த்தப் பயன்படுத்தப்பட்ட கதாபாத்திரங்கள் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தாமல் பத்தோடு பதினொன்றாக நகர்வது மைனஸ். குறிப்பாக ஹீரோவின் நண்பர்கள், முக்கியமான பாத்திரங்களின் மரணங்களை அப்படியே கடந்து போகிறோம். ஒருவேளை இவ்வளவு பெரிய கதையை ஒரு வெப்சீரிஸாக எடுத்திருந்தால் தேவையான உணர்வுகள் கடத்தப்பட்டிருக்குமோ?! கிளைமாக்ஸ் காட்சியை நெருங்குவதற்காக வடிவமைப்பட்ட காட்சிகளின் நீளத்தையும் இன்னும் குறைத்திருக்கலாம்.
சொல்லவந்த அரசியலிலிருக்கும் தெளிவு, புதுமையான முயற்சி என்ற வகையில் சுவாரஸ்யம் சேர்க்கும் இந்தக் `கடைசி உலகப் போர்’, தேவையான உணர்வுகளையும் அழுத்தமாகக் கடத்தியிருந்தால் தமிழ் சினிமாவின் புதியதொரு அத்தியாயத்தின் தொடக்கமாக அமைந்திருக்கும்.