ராணுவத்திலிருந்து வந்த கணவர், தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு அவரையும் வீட்டிலிருந்த மற்றொரு நபரையும் தாக்குகிறார். மதுபோதையிலிருந்த அந்த நபரிடமிருந்து தப்பித்து ஊரைவிட்டு ஓடுகிறார்கள் இருவரும். இதனால் ஆத்திரமடைந்த கணவர் அவருடைய குழந்தைகள் இருவரையும் பாட்டி வீட்டில் விட்டுவிடுகிறார். அங்கே சென்ற சிறிது நாளிலே பாட்டியும் இறந்து விட, தூரத்துச் சொந்தமான பெரியப்பா பெரியசாமியின் (யோகி பாபு) துணையோடு வேலைக்குச் செல்கிறான் சிறுவன் செல்லதுரை (ஏகன்). பதினொரு வயதில் ஆதரவற்ற நிலையில் வாழ்க்கையைத் தொடங்கும் செல்லதுரைக்குத் தங்கை ஜெயசுதா (சத்யா) மீது அளவுகடந்து அன்பு. காலங்கள் ஓட, தங்கை கல்லூரிக்குச் செல்கிறார். செல்லதுரை, பெரியசாமி நடத்தும் கோழிக்கடையில் கறி வெட்டும் நபராக வேலை செய்கிறார். இப்படியிருக்க ஒரு காதலினால் ஏற்படும் திருப்பங்கள் அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை எல்லாம் நிகழ்த்துகின்றன என்பதே இந்த ‘கோழிப்பண்ணை செல்லதுரை’.
தங்கையின் மீது அளவற்ற பாசம், உழைத்து உழைத்து இறுக்கமாகவே இருக்கிற முகபாவனை எனத் திரைப்படத்தின் மொத்த பாரத்தையும் தாங்கி கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார் ஏகன். நாயகனைச் சுற்றிவரும் டெம்ப்ளேட் நாயகியாக பிரிகிடா சாகா, இன்னும் நடிப்பில் நிறைய நிறையக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. மிகவும் முக்கியமான பெரியப்பா வேடத்தில் நடித்திருக்கும் யோகி பாபு வழக்கமான நையாண்டிகளைக் குறைத்து கதாபாத்திரத்துக்குத் தேவையான உணர்வுகளை ஆங்காங்கே வழங்கியிருக்கிறார். படத்திலிருக்கும் சில பல ஆறுதல்களில் ஒன்றாக, குட்டிப்புலி தினேஷின் லந்தான ஒன்லைனர்கள் வேலை செய்திருக்கின்றன. தங்கையாக நடித்துள்ள சத்யாவிடம் சில இடங்களில் மிகை நடிப்பு எட்டிப்பார்க்கிறது. கதைசொல்லி பவாசெல்லதுரையும் மிகவும் கஷ்டப்பட்டு நடிக்க முயன்றிருக்கிறார்.
தேனி மாவட்டத்தின் இயற்கை எழிலையும், வராக நதியின் ரம்மியத்தையும் சிறப்பான ஒளியுணர்வுடன் அளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அசோக் ராஜ். என்.ஆர்.ரகுநந்தனின் பின்னணி இசையும் அதற்கேற்ப பீல்குட் உணர்வைக் கடத்தும் விதத்தில் தாலாட்டியிருக்கிறது. இருப்பினும் பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கும் அளவுக்கான தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. சீரியல் மோடில் நகர்ந்த இரண்டாம் பாதியின் நீளத்தைப் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் இன்னும் குறைத்திருக்கலாம். அதேபோல அவரது எடிட்டிங் எனச் சொல்லும் அளவுக்கான அவரின் முத்திரையும் மிஸ்ஸிங்! கோழிக்கடையில் ஒரு சில சமயங்கள் கோழியே இல்லாத கூண்டுகள் இருப்பதைக் கலை இயக்குநர் ஆர்.சரவண அபிராமன் கவனித்திருக்கலாம். (இதுமட்டுமா பிரச்னை என்று கேட்காதீர்கள்…)
நாம் எல்லோரும் சராசரியாகக் கடந்து போகிற சாமானியர்கள் அனைவருக்குமே ஒரு வாழ்க்கையிருக்கிறது. அந்த மனிதர்களின் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்கிற சிந்தனை சிறப்பே! ஆனால் அதை அந்த மனிதர்களுடன் நம்மை நெருக்கமாக்கும் திரைக்கதையை உருவாக்காமல், காட்சிகளைச் செயற்கையாகக் கோர்ப்பது அவர்களை விட்டு விலகியே செல்ல வைக்கும். பெற்றோரின் பிரிவு, ஆதரவற்ற நிலை என்று ஆரம்பிக்கும் காட்சிகள் அதன் வேதனையைக் கடத்தினாலும், அதன் பின் கிடைக்கின்ற அன்பின் ஆதரவை ஜீவனோடு சொல்லத் தவறுகிறது படம். எதிர்பாராத திருப்பங்கள்தான் வாழ்க்கை என்று ஆரம்பத்தில் எழுத்தாகப் போட்டுள்ள இயக்குநர் சீனு ராமசாமி, இரண்டாம் பாதியில் அதைத் திரைக்கதையாக எழுதிய விதத்தில் ஏமாற்றமளிக்கிறார்.
திருநங்கைகள் நலன், உருவக் கேலிக்கு எதிர்ப்பு, போருக்கு எதிரான நிலைப்பாடு எல்லாம் சரிதான், ஆனால் இந்தக் கதைக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வியை எழுப்பி வலிந்து திணிக்கப்பட்டிருந்த உணர்வையே கொடுத்தது. அதேபோல பெண்கள் யாரும் வீட்டில் சமைப்பதில்லை என்ற வசனமும் தேவையில்லாத ஆணிதான்! அண்ணன் தன் தங்கையைத் திட்டுகிற காட்சி, திருப்பம் என்று வைக்கப்பட்டாலும், அது அதிர்ச்சியைத் தராமல் பதிலுக்குக் கோபத்தையே வரவைக்கிறது. மெலோடிராமா என்று ஒரு ஜானர் இருக்கிறது. ஆனால் ‘இவ்வளவு மெல்லமாவா’ என்று அலற வைக்கும் அளவுக்கு மெகா சீரியல் பாணியில் இரண்டாம் பாதி நீண்டுகொண்டே செல்வதும் மைனஸ். இது செல்லதுரை அளவுக்கு நமக்கும் பொறுமையும், மன்னிக்கும் குணமும் இருக்கிறதா என்னும் சோதனை முயற்சியா என்பது இயக்குநருக்கே வெளிச்சம்!
மொத்தத்தில் யதார்த்த மனிதர்களின் வாழ்வியலையும், கதையின் திருப்பங்களையும் செயற்கையாகப் பதிவு செய்துள்ள இந்த `கோழிப்பண்ணை செல்லதுரை’ நம்மிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறான்.