சண்டிகர்: கடந்த 2016-க்கு பிறகு இந்தியாவில் பாகிஸ்தான் நாட்டு திரைப்படம் வெளியாக உள்ளது. வரும் அக்டோபர் 2-ம் தேதி ‘தி லெஜண்ட் ஆஃப் மௌலா ஜாட்’ என்ற பாகிஸ்தான் நாட்டு திரைப்படம் இந்தியாவில் வெளியாக உள்ளது.
இது குறித்து அறிவிப்பை இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்தப் படம் கடந்த 2022-ல் வெளியாகி இருந்தது. பஞ்சாபி மொழியில் வெளியான இந்த படம் சுமார் 14 மில்லியன் அமெரிக்க டாலர்களை பாக்ஸ் ஆபிஸில் வசூலித்தது.
சர்வதேச நாடுகளிலும் இந்தப் படம் வெளியாகி இருந்த நிலையில் தற்போது இந்தியாவில் வெளியாக உள்ளது. கடந்த 2016-ல் நடந்த உரி தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு பாகிஸ்தான் திரைக் கலைஞர்கள் அங்கம் வகிக்கும் படங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது ‘தி லெஜண்ட் ஆஃப் மௌலா ஜாட்’ வெளியாக உள்ளது.
“இந்தியாவின் பாஞ்சாப் மாநிலத்தில் அக்டோபர் 2-ம் தேதி படம் வெளியாக உள்ளது. படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கடந்தும் வார இறுதிகளில் பாகிஸ்தானில் திரையரங்கம் நிரம்பி காட்சி அளிக்கிறது. இந்நிலையில், தற்போது இந்தியாவில் உள்ள மக்கள் இந்த தொழிலாளியின் காதல் அனுபவத்தை பார்க்க உள்ளனர்” என படத்தின் இயக்குநர் பிலால் தெரிவித்துள்ளார்.
படத்தின் நாயகன் ஃபவத் கான் மற்றும் நாயகி மஹிரா கான் ஆகியோரும் இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.