நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில் அன்னை சத்யா என்ற பெயரில் அரசு பெண் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் பெற்றோரை இழந்த 50-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் உள்ளனர். அனைவரும் காப்பகத்தின் அருகில் உள்ள பள்ளிகளில் 1-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். காப்பகத்தின் கண்காணிப்பாளராக சசிகலா என்பவர் பணி புரிந்து வருகிறார். குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்கு இரண்டு ஆண்கள், ஒரு பெண் என மூன்று பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் தான் சத்யபிரகாஷ். பெற்றோர் இல்லாததது உட்பட பலவகையில் மனரீதியாக பாதிக்கப்பட்ட அந்த குழந்தைகளுக்கு சத்யபிரகாஷ் மனநல ஆலோசனை வழங்கி வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் இந்த காப்பகத்தில் பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே காப்பகத்தில் உள்ள பெண் குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்ததாக சொல்லப்படுகிறது. அரசு தரப்பில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டும் குழந்தைகள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் காப்பகத்தில் உள்ள பெண் குழந்தைகள் காப்பகத்திலிருந்து தப்பி செல்வதும், பின்னர் போலீஸார் அவர்களை மீட்டு வருவதுமாக இருந்தது. இந்த சூழலில் சத்யபிரகாஷ் காப்பகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து கண்காணிப்பாளர் சசிகலாவிடம், நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் புகார் பெற்று விசாரணை மேற்கொண்டனர். இதில் சத்யபிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் திடுக்கிடும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து நாம் களத்தில் விசாரித்த போது, “காப்பகத்தில் உள்ள பெண் குழந்தைகள் மூன்று ஆண்டுகளாகவே பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்கிறார்கள். குட் டச், பேட் டச் எதுவென சொல்லி கொடுத்து குழந்தைகளை மனக் கவலையிலிருந்து மீட்க வேண்டிய மன நல ஆலோசகரே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் என்பது கொடுமை. இதில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம். தீர விசாரித்தால் அவர்களும் சிக்குவார்கள்.
இது தொடர்பாக விசாரணை செய்த எஸ்.பி அருண் கபிலன், கண்காணிப்பாளர் சசிகலாவிடம், `மூன்று வருடங்களாக நடந்து வருவதாக தெரிகிறது. உங்களுக்கு எப்படி தெரியாமல் போனது, இதற்கு நீங்களும் உடந்தையாக இருந்தீர்களானு?’ கடுமையாக கேட்டுள்ளார். அதற்கு சசிகலா பதில் சொல்ல முடியால் தவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி இரவு நேரத்தில் எட்டு குழந்தைகள் காணாமல் போனார்கள். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நாகூர் போலீஸார் அந்த எட்டு குழந்தைகளையும் சென்னை சென்று மீட்டு வந்தனர். அப்போது எங்களுக்கு காப்பகத்தில் பாதுகாப்பில்லை, மனசு தாங்கலைனு சொன்னதாக சொல்லப்படுகிறது.
இதே போல் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் பல குழந்தைகள் காணாமல் போய் பின்னர் மீட்டு கொண்டுவரப்பட்டனர். அப்போதே அலட்சியம் காட்டாமல் இதில் உரிய கவனம் செலுத்தி விசாரணை செய்திருக்க வேண்டும். காப்பகத்தில் உள்ள அனைத்து அலுவலகர்களுக்கும் நடந்தது தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. பெற்றோரும் இல்லை, கேள்வி கேட்கவும் யாரும் இல்லை என்கிற தைரியம் தான் சத்யபிரகாஷை குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக நடந்து கொள்ள வைத்துள்ளது. இது தொடர்பாக தற்போது பாதிக்கப்பட்ட 5 பேரிடம் போலீஸார் புகார் பெற்றுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம், குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததுடன் அவரை கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் வேறு யாரும் தவறு செய்திருந்தாலும் தப்பிக்க விடக்கூடாது. அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு தேவையான மன ரீதியான ஆதரவு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு, மனநல மருத்துவர் ஆகியோர் கொண்ட குழு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41