சண்டிகர்: மொத்தம் 90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. ஹரியானா முதல்வர் நயாப் சிப் சைனி, மத்திய அமைச்சர்கள் எம்.எல்.கட்டார், ராவ் இந்தர்ஜித் சிங், கிரிஷன் பால் குர்ஜார் ஆகியோர் முன்னிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இதனை வெளியிட்டார்.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில், “அக்னி வீரர்கள் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் 24 விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படும். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 வழங்கப்படும். நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் ஹரியானாவை சேர்ந்த ஓபிசி மற்றும் எஸ்சி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். கல்லூரிகளில் படிக்கும் கிராமப்புற மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக முதல்வர் நயாப் சிங் சைனி கூறும்போது, “தேர்தல் அறிக்கையில் இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெண்கள் நலனில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என்றார்.