சென்னை: மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்ரன்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமனத்தில் உள் ஒதுக்கீடு அளிக்கவும் அவர்கள்கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சுமார் 30 ஆயிரம் கள உதவியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ள நிலையில், அந்த காலியிடங்களில் ஐடிஐ படித்தவர்களையும் ஐடிஐஅப்ரன்டீஸ் பயிற்சி முடித்தவர்களையும் பணிநியமனம் செய்யக்கோரி தமிழ்நாடு ஐடிஐ படித்த வேலைவேண்டுவோர் ஐக்கிய சங்கம் சார்பில் அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலக பின்நுழைவுவாயில் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
அந்த சங்கத்தின் மாநில தலைவர்எஸ்.எம்.கார்த்திகேயன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியதொழிலாளர் பொறியாளர் ஐக்கியசங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மு.சுப்பிரமணியன் தொடங்கிவைத்து உரையாற்றினார்.
தமிழ்நாடு எலெக்ட்ரீசியன்-டெக்னீசியன் சங்க மாநில தலைவர் மாயாண்டி, தமிழ்நாடு தனியார் ஐடிஐ சங்க மாநில தலைவர் முருகேசன், சுதந்திர இந்திய தேசியகூட்டமைப்பின் மாநில தலைவர்சரவணன், தமிழ்நாடு மின்சார வாரியதொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் மாநில பொருளாளர் முத்துசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
நேரடி தேர்வு மூலம்… ஐடிஐ முடித்தவர்களை நேரடி தேர்வு மூலம் மின்வாரியத்தில் நியமிக்க அரசு அனுமதி வழங்க வேண்டும். தொழில்பழகுநர் பயிற்சி(அப்ரன்டீஸ்) முடித்தோருக்கு வேலைவாய்ப்பில் உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும். கரோனா பாதிப்புகாரணமாக, பணி நியமனத்தின்போது வயது வரம்பில் தளர்வு வழங்க வேண்டும். தொழிற்திறன் தேர்வில் பெண்களுக்கு விதிவிலக்குஅளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டன.