சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியை மிரட்டும் வகையில் பேசியவர்கள் மீது பாஜக தலைமையோ, பிரதமர் மோடியோ உரிய நடவடிக்கை எடுக்காததற்கு அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகிலஇந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என்.ஹெக்டே,சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் எஸ்.ராஜேஷ்குமார்உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல்: இக்கூட்டத்தில், ‘ஒரே நாடுஒரே தேர்தல்’ கொண்டு வருவதற்கு கண்டனம், மீண்டும் காமராஜர்ஆட்சி அமைப்பதே நமது இலக்கு.இதற்கான செயல் திட்டத்தை வகுக்க தமிழக காங்கிரஸ் தலைவர் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் துணையிருப்போம் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார் பேசும்போது, “கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவும் அதன் ஆதரவு அமைப்புகளான ஆர்எஸ்எஸ், விசுவ இந்து பரிஷத் போன்றவற்றின் நிர்வாகிகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு காங்கிரஸ் தலைவர்களை தாக்கிபேசி வருகின்றனர். அண்மையில், ராகுல்காந்தியின் நாக்கை வெட்டுபவர்களுக்கு ரூ.11 லட்சம் என்றுஅறிவித்தவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, காங்கிரஸ் தலைவர்களையும், காங்கிரஸ் சித்தாந்தத்தையும் பாதுகாப்பதில் லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் உறுதியாக உள்ளோம்” என்று கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் என்.எம்.ஹேக்டே பேசும்போது, “ராகுல்காந்தியை மிரட்டும் தொனியில் பேசுபவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். சிறிய விமர்சனத்துக்கே கடுமையாக எதிர்வினையாற்றும் பாஜகவினர், ராகுல்காந்தியை கடும் சொற்களால் பேசியவர்கள் மீது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வெட்கக்கேடானது” என்றார்.சத்தியமூர்த்தி பவனில் புதுப்பிக்கப்பட்ட ராஜீவ்காந்தி அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.