திருப்பதி: திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய் கலப்படமானது என்றும், அதில் பன்றிக் கொழுப்பு உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்தது 4 ஆய்வக பரிசோதனைகளிலும் உறுதியாகி இருப்பதாகவும் திருமலா திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலா திருப்பதி தேவஸ்தானம்: இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி பெருமாள் கோயிலை நிர்வகிக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியமலா ராவ், “திருப்பதி பெருமாள் கோயிலுக்கு நெய் சப்ளை செய்பவர்கள் தரமான நெய்யை சப்ளை செய்கிறார்களா என்பதை பரிசோதிக்க கோயிலுக்குச் சொந்தமாக ஆய்வக வசதி இல்லை. வெளியே ஆய்வு செய்யலாம் என்றால், ஆய்வகக் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. நெய் சப்ளை செய்பவர்கள் இதை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளில் விலங்கு கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான நான்கு அறிக்கைகளும் ஒரே மாதிரியான முடிவுகளைத் தந்தன. எனவே நாங்கள் உடனடியாக விநியோகத்தை நிறுத்தினோம். மேலும் ஒப்பந்தக்காரரை பிளாக் லிஸ்ட்டில் வைத்துள்ளோம். அபராதம் விதிக்கும் நடைமுறையும் தொடங்கப்படும். அதோடு, சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்: இதனிடையே, திருப்பதி பெருமாள் கோயிலில் பிரசாதத்துக்குப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருந்ததாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக ஆந்திரப் பிரதேச அரசிடம், மத்திய அரசு அறிக்கை கோரியுள்ளது.
டெல்லியல் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா, “இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசி அவரிடம் விவரம் பெற்றேன். இது தொடர்பான ஆய்வக அறிக்கையைப் பகிர்ந்து கொள்ளுமாறு அவரிடம் கேட்டுள்ளேன். அந்த அறிக்கையை நான் ஆராய்வேன். மேலும், இது குறித்து மாநில ஆட்சியாளர்களிடம் பேசி விசாரணை நடத்துவேன். உணவு பாதுகாப்பு தரத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நான் அறிக்கையை கேட்டுள்ளேன். அறிக்கை வந்ததும் நாங்கள் அதை ஆய்வு செய்வோம்” என்று கூறினார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் சத்யம் சிங் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், “திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் கோயில் பிரசாதம் தொடர்பான தகவல்கள், பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. திருப்பதி கோயில் பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கண்டறிப்பட்டிருப்பது அரசியலமைப்பின் 25 வது பிரிவின்படி குற்றம். இது மத உரிமை மற்றும் பழக்கவழக்கங்களுக்கு எதிரானது.
மத நடைமுறைகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் இதை வலியுறுத்தியுள்ளன. திருப்பதி பிரசாத விவகாரம், கோயில் நிர்வாகத்தில் உள்ள மிகப்பெரிய அமைப்பு சிக்கல்களின் அறிகுறி. அர்ப்பணிப்பு மற்றும் கலாச்சார விழுமியங்களை பாதுகாக்கக் கூடியதாக கோயில் நிர்வாகங்கள் இருக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது. இதை நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.